சென்னை:
தமிழ்நாட்டில் மட்டும் 31 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.
5845 அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் 20,711 தொடக்கப்பள்ளி காலி பணியிடங்கள் தகுதி தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டது. அதன் பிறகு 2013,2017,2019,2022 ஆம் ஆண்டுகளில் தகுதி தேர்வு மட்டும் நடைபெற்றது. இதுவரை ஒரு பணி நியமனம் கூட வழங்கவில்லை.
2024 ஆம் ஆண்டு நியமனத் தேர்வு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெற்றது. இதில் 2457 ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தொடக்கப் பள்ளியில் தற்போது வரை உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 20000 உள்ள நிலையில் தற்போது வழங்கியுள்ள பணி நியமனம் மிகவும் சொற்பமானது. டிஆர்பி ஆண்டறிக்கையின் படி அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள் 14038.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கை 177-ல் ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படும் என்கிற வாக்குறுதி காற்றில் பறந்தது!
110 விதியின் கீழ் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த 19260 தொடக்கப்பள்ளி காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் என்கிற வாக்குறுதியும் கேள்விக்குறியானது?
சென்னை உயர் நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது ஆபத்தானது என்கிற தீர்ப்பையும் அரசு பொருட்படுத்தவில்லை.
மேலும் பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள 450 வட்டாரங்களில் 18000 தற்காலிக ஆசிரியர்கள் பணி புரிவது வேதனைக்குரியது. இதனால் அடிப்படை கல்வி ஏழை எளிய மாணவர்களுக்கு சென்றடைவதில் சுணக்கம் ஏற்படுகிறது. தகுதியுள்ள ஆசிரியர்கள் உள்ளபோது தற்காலிக ஆசிரியர்கள் எதற்கு? அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெறாத 10,700 இடைநிலை ஆசிரியர்கள் முறைகேடான முறைகளில் நியமனம் நடைபெற்றது தான் சமூக நீதியா?.
கடந்த 2024 ஆம் ஆண்டு படி 239 தொடக்கப்பள்ளிகள் மூடுவிழா கண்டுள்ளது இதுதான் சாதனை ஆட்சியா? தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2075 பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? தமிழகத்தில் 3500 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது ஏன்? 2021-2026 ஆண்டுகளில் சட்டசபையில் கல்விக்கான நிதி ரூபாய் 2,36, 159 கோடி நிதி ஒதுக்கியும் நிரந்தர ஆசிரியர்கள் நியமனங்கள் இல்லாதது ஏன்? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நிதி பற்றாக்குறையினால் தான் பணி நியமனம் வழங்கவில்லை, அனைத்து காலிப் பணியிடமும் நிதி வந்தவுடன் நிரப்பப்படும் என தெரிவித்தார்.
தற்போது மத்திய அரசு முதல் கட்டமாக கல்விக்கான நிதியை வழங்கிய பின்பும் பணி நியமனம் பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை இல்லாதது ஏன்? இதுதான் சமூக நீதி ஆட்சியா? ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் தமிழ்நாட்டில் 207 தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம். 2025 ஆம் ஆண்டு மூன்று லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதன் படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றாலும் 11 ஆயிரம் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் இந்த தாமதம் ஏன் ? 2009 பிரிவு 23 (1) படி தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவுறுத்தல் படி தகுதித் தேர்வு நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை 23, 972 .
ஆசிரியராக வேண்டுமென்ற கனவோடு ஆசிரியர் பயிற்சி பட்டம் இரண்டு ஆண்டுகள் படித்த நாங்கள் தற்போது ஏரி வேலை, சித்தாள் வேலை, கூலி வேலை, காவலாளி, வீட்டு சமையல் வேலை, போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.
ஆசிரியர்கள் நாங்கள் அவமானத்தின் சின்னமாக நிற்கின்றோம்.
ஆசிரியர்களாகிய எங்களை அந்நியர்களாக நினைப்பது ஏன்? தொடக்கப்பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையோடு திமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனுக்களை கொடுத்தோம், திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மனுக்களை கொடுத்தோம், மாவட்டம் தோறும் ஆட்சியாளர்களுக்கு மனுக்களை கொடுத்தோம், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் முதல்வர் அவர்களுக்கு தங்களது அறிக்கையை கொடுத்துள்ளார்கள்.
இதுவரை 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்களும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஆயிரக்கணக்கான மனுக்களும், முதல்வர் அவசர எண் அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி புகார்களும், பல்வேறு அறவழி உண்ணா நிலை போராட்டங்களும் இப்படி தமிழகம் முழுவதும் பல கட்ட முயற்சிகள் எடுத்தும் தமிழக அரசு ஆசிரியர்களை வஞ்சிப்பது ஏன்?.
தொடக்கக்கல்வி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் உங்களுக்கு வேறு வேலையே இல்லையா என எங்களை அவமானப்படுத்துவதும், தற்காலிக ஆசிரியர்களை வைத்து நாங்கள் பள்ளியை நடத்துவோம் என்கிற ஏக வசனமும், ஏன் நீங்கள் ஆசிரியர்தான் ஆக வேண்டுமா என்கிற ஏளனமான கேள்வியும் இன்னும் பல அவமானமும் சந்தித்து வருகிறோம்,
இறுதியாக மீண்டும் ஒரு தேர்வு என இடியாய் எங்களுக்கு ஓர் அறிவிப்பு வந்துள்ளது.
இதுதான் சமூக நீதி ஆட்சியா? நாங்கள் என்ன தேர்வு எழுத பிறந்தவர்களா?
13 ஆண்டுகளில் நான்கு முறை தகுதித் தேர்வு மற்றும் ஒரு நியமனத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற எங்களுக்கு படிப்படியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் எங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை மாவட்டம் தோறும் ஆட்சியரிடம் திருப்பி வழங்குவோம்.
மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
(கோ.பார்த்திபன்
மாநிலத் தலைவர்
நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு)
