சென்னை : ஏப், 28

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000-ஐ நெருங்கியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1543 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 369 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1282 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 3548 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு 162 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 394 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது.

கொரோனாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மார்ச் 24-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அவர்கள் பிறப்பித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு காவல்துறையினர், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அரசின் பிற துறையை சேர்ந்த பணியாளர்களும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 1 மாதத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப்பழக்கத்திற்கு அடிமையான பலர் திருந்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவிற்கு பிறகும் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதால், கள்ளசாராயம் தயாரிப்பது, அதனை விற்பனை செய்வது போன்ற செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கள்ளசாராயம் பிடிபடுவது வாடிக்கையாகி விட்டது.

கிராம புறங்களில் கள்ளசாராயம் தயாரிப்பு விற்பனை செய்வது அதிகரித்துள்ள நிலையில், நகர் புறங்களில் கஞ்சா விற்பனை என்பது களை கட்டி வருகிறது. மதுபோதைக்கு அடிமையானவர்களுக்கு மதுபானம் கிடைக்காத காரணத்தால், வேறு விதமான போதையை மதுபிரியர்கள் நாட தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தமிழகத்தின் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை என்பது அமோகமாக நடைபெற்று வருகிறது.

கஞ்சா உள்பட பல விதமான போதை வஸ்துக்கள் தற்போது எளிதாக நகர் புறங்களில் கிடைக்கிறது. இதனை பெரும்பாலும் மதுபிரியர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பெருமளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. கொரோனாவை ஒழிக்க போராடி வரும் அரசு, கஞ்சா, கள்ளசாராயம் போன்ற போதை வஸ்துக்களையும் கடுமையான நடவடிக்கையின் மூலம் ஒழிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்தார்.