சென்னை:ஏப்,28,

ஊரடங்கின் அவசியத்தை பற்றியும்,மக்கள் படும் அவஸ்தைகளை பற்றியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நமது யுகம் நியூஸ் மின்னிதழ்

தற்போது சூழலில் பரபரப்பாக இயங்கி வரும் மனித உரிமைகள் ஆர்வலரும், சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்கள் யுகம் நியூஸ் மின்னிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:

உங்கள் தற்போதைய பணிகள் பற்றி?

ஒரளவுக்கு எங்களை சுற்றியுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவையை எங்களால் இயன்றவரை தீர்த்து வருகிறோம். இதுவரை 750 குடும்பங்களுக்கு உதவியிருக்கிறோம். சமீபத்தில் எங்கள் அமைப்பின் சார்பில் சமூக பணியை ஆந்திராவிலும் தொடங்கியுள்ளோம்.

ஊரடங்கு தடை உத்தரவு அவசியத்தை மக்கள் உணர்ந்துள்ளார்களா?

அதை பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. அதை குறித்து கல்வியாளர்களும், இளைஞர்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் மக்களிடையே சமூக விலகலின் அவசியத்தையும் நோய் தொற்றின் ஆபத்தையும் பொது மக்களுக்கு உணர்த்தவேண்டும்.

நோயைவிட பசிகொடியது அல்லவா?

உண்மைதான் இந்த நோய் தொற்று நம் உயிரோடு விளையாடினால் பராவாயில்லை நம்மை தாண்டி நமக்கு தெரியாமலே சமூக தொற்றாக மாறும் அபாயம் உள்ளது. இதை மனிதநேயம் கொண்டோரும் உணர வேண்டும். மனிதம் என்ற பெயரில் நோய் தொற்றுக்கு காரணமாகி விட கூடாது.

தன்னார்வலர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

தன்னார்வலர்களுக்கு நாளை நோய் தொற்று ஏற்பட்டால் எந்த சலுகையோ ஏன் அவர்களது குடும்பத்திற்கு எந்த பாதுகாப்போ கிடையாது. இது அங்கீகரிக்கபடாத செய்தியாளர்கள் , மின்னிதழ் மற்றும் யூடியூப் செய்தியாளர்களுக்கும் பொருந்தும். ஆகையால் கவனத்தோடு பணியாற்ற வேண்டும். அவசியமில்லாமல் வெளியே வரவேண்டாம். வீட்டிற்கு செல்லும்போது நம்மையறியாமல் தொற்று நோயை தோளில் சுமக்க நேரிடலாம்.

தன்னார்வலர்கள் தானே இந்த சூழலில் பெரும் பலம் தற்போது அவர்களும் பின் வாங்கினால்?

நான் (நாம் ) பின்வாங்குவதை பற்றி பேசவில்லை.கவனத்தோடு பணியாற்றுவதை பற்றி தான் பேசுகிறேன். சமீபத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்ட வார்டில் தன்னார்வ பணி செய்யும் சகோதரி ஒருவர் உரையாடினார் . அவர் சொன்ன ஒவ்வொரு செய்தியும், அவ்வளவு வலிகள் நிறைந்த செய்தியாக இருந்தன. 5 மாத குழந்தைக்கு நோய் தொற்று வந்துள்ளது. அந்த குழந்தையின் தாய்க்கும் நோய் தொற்று ஏற்பட்டு பாலூட்ட கூட இயலாமல் தவித்த தவிப்பு மரண வேதனையான செயலாகும்.

அதேபோல நோய் தொற்று பாதித்தோரின் மனநிலை, மனபிறழ்வு ஏற்பட்டோரின் மனநிலைக்கு சமம். அந்த சகோதரியுடன் பணியாற்றிய ஒரு சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதாக தகவல். அங்கு பணியாற்றும் ஒவ்வொரு தன்னார்வலரும் வாரம் இருமுறை நோய் தொற்று பரிசோதனை செய்யும் போது பாசிட்டிவ்வா? நெகட்டிவா என பரிசோதனை முடிவு வெளியாகும்போது மனநிலை எப்படி இருக்கும்னு யோசித்து பாருங்கள்.

உறவுகளிடையே பிரச்சனை என பல சோதனைகள் உள்ளது. கிட்டதட்ட உயிரை பணையம் வைத்து பணி செய்து வருகின்றனர். அதேபோல தன்னார்வலர்கள் அனைவரும் ஊரடங்கின் அவசியத்தையும், சமூக விலகலின் முக்கியத்துவத்தையும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பத்திரிக்கையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏன் குறிப்பாக வலியுறுத்த காரணம் என்ன?

மக்களோடு தினமும் களப்பணியாற்றும் காவலர்கள், செவியர்கள், மருத்துவர்கள், சுதாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட இவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது.

ஆனால் தன்னார்வலர்களும் பட்டியலில் இல்லாத செய்தியாளர்களும் கவனிப்பட வேண்டியவர்கள் என்பதால் அவ்வபோது வலியுறுத்தி வருகிறோம்.

இதற்கு மக்கள் செய்ய வேண்டிய என்ன?

மருத்துவ வசதி பரவலாக உறுதிசெய்யபடும் வரை சமூக விலகலை கடைபிடித்தே ஆக வேண்டும் மக்கள் அனைவரும் தன்னை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி கொள்ளவேண்டும். அதேபோல காணொளி ஊடகங்கள் நடைமுறை சாத்தியத்திற்குட்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும்படி மழுங்க செய்யாமல் மக்களிடம் சேர்க்கவேண்டும்.

மிக முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய கருத்துக்கள் என நான் குறிப்பிடுவது கொரோனா நோய் தொற்றினால் தென்கொரியா எப்படி மீண்டது என ஆராய்ச்சியாளர் முனைவர். ஆரோக்கியராஜ் அவர்களின் கருத்தும், மருத்துவம், பொருளாதாரம் விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விஞ்ஞானி.வெ.பொன்ராஜ் அவர்களின் கருத்தும் அரசாங்கத்திடமும், அது சார்ந்த விழிப்புணர்வை மக்களிடமும் சேர்க்க வேண்டும்.

நோய் தொற்று பற்றி தகவல் பரவ ஆரம்பித்த நாட்கள் முதல் இன்று வரை இடைவிடாது சாத்தியமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கவனிக்கவேண்டியதை கவனிக்காததும், பயனற்ற கருத்துக்களை டிரெண்ட் ஆக்குவதும் தற்போதைய சூழலில் ஆரோக்கியமானது அல்ல என ஜோசப் இளந்தென்றல் குறிப்பிட்டார்.