வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பழைய வாணியம்பாடி பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஜாகிர் உசேன். இவருடைய கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட தேவஸ்தானம் சிவன் கோயில் பின்புறம் உள்ள பாலாற்றங்கரையில் மணல் மூட்டைகளாக கட்டப்பட்டு இரு சக்கர வாகனத்தில் பகல் நேரத்திலேயே சர்வ சாதாரணமாக கடத்தப்பட்டு வருகிறதாம்.

மேலும் சென்னம்பேட்டை, பெரிய பேட்டை பகுதியில் இருந்து கிராம நிர்வாக அலுவலகம் வழியே அரிசி கடத்தல் என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இவற்றை தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் ஜாகிர் உசேன் சட்டவிரோத செயலில் ஈடுபடும் இவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் .
மணல் கொள்ளையர்களிடமும் அரிசி கடத்துபவர்களிடமும் மாதம் தவறாமல் சேர வேண்டிய தொகை இவரிடம் சேர்ந்து விடுவதால் ஜாகிர் உசேன் இவற்றை கண்டு கொள்வதில்லை என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே வாணியம்பாடி வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு
துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இப்பகுதியில் உள்ள பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.