சென்னை:
தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 -க்கும் மேற்பட்டோர் துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த 2013 முதல் 2024 வரை நான்கு தகுதித் தேர்வும், அரசாணை 149 படி நியமனத் தேர்வும், தமிழ் தகுதி தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பெரும்பாலும் 40 முதல் 50 வயதை கடந்த நிலையில் குடும்ப சூழல், பொருளாதார சிக்கல் ஆகியவற்றை எதிர்கொண்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2024 சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த 19,260 காலிப்பணியிடங்களில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வு அடிப்படையில் மறுதேர்வு இல்லாமல் நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மேற்கண்ட கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று நம்பிக்கை அளித்தேன் என்று துரை வைகோ அவர்கள் தெரிவித்தார்.

அப்போது நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.