சென்னை:தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, பிப்ரவரி 2-ம் தேதி கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைத்தார் தவெக தலைவர் விஜய். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன் ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வை உருவாக்கிக் காட்டுவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே ஊழலை ஒழிக்க அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். அப்போது டெல்லி சென்று அன்னா ஹசாரே போராட்டத்திற்கு விஜய் நேரில் ஆதரவு தெரிவித்தார். 500 – 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்த போது, அதனை வன்மையாக கண்டித்தவர் விஜய்.
அதே போன்று ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக சென்னை மெரீனாவில் மக்கள் மாபெரும் எழுச்சி போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நேரில் சென்று மக்களோடு மக்களாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக விஜய் போராடினார். மேலும் நீட் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டு அரியலூர் அனிதாவின் வீட்டிற்கே நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூறினார்.
கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் பிரச்னைக்காக நேரில் சென்று ஆதரவு தெரிவித்த விஷயம் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசைக்கு தெரியாது போலும். “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் “ தமிழக அரசியல் எதிர்காலம் பூஜ்யம் ஆகிவிட்ட நிலையில், தமிழிசை போன்ற பா.ஜ.க. தலைவர்கள் பிதற்ற தொடங்கிவிட்டார்கள்.
கடந்த வெள்ளத்தின் போது தூத்துக்குடி மக்கள் பாதிக்கப்பட்ட போது, நேரில் சென்று அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லி நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கியதை தமிழிசைக்கு நினைவு இருக்க வாய்ப்பு இல்லை. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை நேரில் சந்தித்து விஜய் தனது ஆதரவு தெரிவித்து இருப்பது பா.ஜ.க.விற்கு பெரும் பேரிடியாக அமைந்துள்ளது.
இப்படி மக்கள் பிரச்னைக்காக நேரில் செல்லும் த.வெ.க. தலைவர் விஜய் வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் எதுவும் செய்ய முடியாது என தமிழிசை பேசியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. த.வெ.க.வின் வளர்ச்சியை பார்த்து பா.ஜ.க. தலைவர்கள் எச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை பதற்றப்பட்டு உளறி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் இந்த பரிதாபங்களை பார்க்கும் போது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.
