சென்னை : ஏப், 30
உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
8 மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப்பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே தினமாகும்.அடிமைப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட ஊமைகளாய் அடங்கிக் கிடந்த தொழிலாளர்கள், தங்களின் அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து, ஆர்ப்பரித்துப் போராடி, உரிமைகளை வென்றெடுத்ததைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் உயரிய நாளே மே தினம் எனும் உழைப்பாளர் திருநாளாகும். உழைப்பின் மேன்மையை இந்த இனிய மே தினத் திருநாளில் போற்றி பெருமிதம் கொள்வோம்.
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும். உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் .நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடும் தொழிலாளர்கள், எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கொரோனாவால் 144 தடை உத்தரவு நாடு முழுவதும் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ளதால், மே தினத்தை நாம் அனைவரும் ஒன்று கூடி கொண்டாட முடியாத நிலையில் உள்ளோம். தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தொழிலாளர்கள் தினத்தை கொண்டாடி மகிழ்வோம்.
தற்போது கொரோனா எனும் கொடிய அரக்கனால் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் வருவாய் இன்றி இழந்து தவிக்கின்றனர். கொரோனா எனும் கொடிய அரக்கன் விரைவில் அழிக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு இனி வரும் காலம் இனிதாய் அமைய வேண்டும் என இறைவனை பிராத்தித்து தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்
