நில அபகரிப்பில் வீண்பழி சுமத்துவதாக அதிமுக பிரமுகர் ஆர்.சி.குப்பன் வழக்கறிஞர் ரூபன் மீது பகீங்கர குற்றச்சாட்டு

சென்னை, சேப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கிய மேரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம்,கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சபாக்கம் பெத்தேல் நகரில் உள்ள 1215 சதுர அடி காலி மனையை கடந்த 2006 ஆம் ஆண்டு, ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகர் என்பவரிடம் வாங்கியுள்ளார்.

ஆரோக்கியமேரி தனது மகன் இறந்த காரணத்தால் மனையை சில மாதங்கள் நேரில் சென்று பார்க்க முடியவில்லை. கடந்த வாரம் நேரில் சென்று பார்த்த போது தனது இடத்தில் குடிசை போட்டு வைத்திருந்தார். ஆனால் குடிசை முழுவதுமாக எரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் இடத்தை வாங்கிகொடுத்த அதிமுக பிரமுகர் ஆர்.சி.குப்பனிடம் முறையிட்டுள்ளார். குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாக சென்று விசாரித்த குப்பனிடம், தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்தி கொண்ட ரூபன் என்பவர் தான் 2017 ஆம் ஆண்டு ஒருவரிடமிருந்து இந்நிலத்தை வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் நீலாங்கரை காவல் நிலையத்தில் ரூபன், குப்பன் மீது புகார் அளித்துள்ளார். அதற்கு எதிர் மனுவாக இன்று நீலாங்கரை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் குப்பன் தரப்பில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அதில், அதிமுக-வில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தன்மீது அவதூறு பரப்பும் வகையில், வழக்கறிஞர் ரூபன் என்பவரை மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, ஊடகங்களில் தன்மீது தவறான தகவல்களை பரப்பி வருகிறார். தனக்கும் கட்சிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், போலியாக பத்திரம் தயார் செய்து, நிலத்தை அபகரித்துள்ள ரூபன் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு உரியவரிடம் வழங்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.