சென்னை :
சீனா வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி, உலகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதுவரை 22 பேர் இறந்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நேற்று வரை 124 பேரையும் கொரோனா வைரசால் பாதிக்கபட்டுள்ளது உறுதி செய்யபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. தமிழக அரசு முழு மூச்சாக கொரோனா தொற்று பரவல் தடுப்பில் ஈடுபட்டு உயரதிகாரிகள், மருத்துவர்கள் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை தன்னலமின்றி பணியாற்றி வருவதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தோ, வைரஸ் பாதிப்பிலிருந்து குணமாக்கும் மருந்தோ இது வரை உலகில் எந்த நாடுகளிலும் கண்டறியப்படவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டவர்கள் சிலர் குணமாகி உள்ளனர். இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமே காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களையும் நோய் தாக்குமோ என்ற பயத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினைபெருக்க கபசுர குடிநீரை மக்கள் ஊரடங்கையும் மீறி வாங்கவருவதால் கொரோனா பரவல் அதிகரித்து சமூகப் பரவலாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்களுக்குத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் கபசுர குடிநீரையோ, மூலிகைப் பொருளையோ இலவசமாக ரேசன் கடைகளில் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வி.எம்.எஸ்.முஸ்தபா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்தார்.
