தருமபுரி:அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின்(தமிழ்நாடு) மாநில பொதுக்குழு, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் மாநிலத் தேர்தல் ஆலோசனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாக அரங்கில் இதன் பொதுச்செயலாளர் பேராசிரியர் ம.சிவராமன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்த கல்வியாண்டில் பணிநிறைவு பெற்ற பேராசிரியர்கள் ராஜேந்திரன்,சுப்பிரமணியன், செல்வசீலன், அன்பழகன் மற்றும் தாமோதரன் ஆகியோர்களை தருமபுரி அரசு கல்லூரி முதல்வர் பேராசிரியர் கண்ணன், பெண்ணாகரம் அரசு கல்லூரி முதல்வர் பேராசிரியர் சங்கர் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் பேராசிரியர்கள் சந்திரசேகரன், கரிகாலன், சின்னத்துரை மணிமுத்து, கிளை நிர்வாகிகள் கவுரவன்,வேலவன் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் சார்பில் திருவண்ணாமலை சா.முருகன் கலந்து கொண்டு கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அதுவரை யுஜிசி அறிவித்துள்ள அடிப்படை ஊதியமான ரூபாய் 50,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்தனர். பெற்றோர் ஆசிரியர் சங்க கௌரவ விரிவுரையாளர்கள் சார்பில் திருவண்ணாமலை செ.சுதாகர் மற்றும் விழுப்புரம் ஜெ.கோவிந்தசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவர்களுடைய கட்டணத்திலிருந்து சொற்ப ஊதியம் வழங்கக்கூடிய அவல நிலையை தடுத்து நிறுத்தி கௌரவ விரிவுரையாளராக நியமித்து தற்போது அவர்களுக்கு வழங்ககூடிய ரூபாய் 25000/-ஐ ஊதியமாக அரசே வழங்க வேண்டும் என்றும்,தாங்கள் பணியாற்றிய காலம் முழுமைக்கும் பணி அனுபவ சான்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் கொண்டு சென்று கௌரவ விரிவுரையாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு வேண்டுகோள் வைத்தனர்.
மேலும் இந்த பொதுக்குழுவில் கீழ்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
தமிழக மாணாக்கர்கள் உயர்கல்வியில் மேன்மை பெறும் உயரிய நோக்கில் தமிழ்நாடு அரசு புதியதாக 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இக்கல்வியாண்டு (2025-2026) முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளதை வரவேற்கிறோம்.
மாணாக்கர்களின் நலனில் அக்கறையுடன் செயலாற்றும் தமிழ்நாடு அரசை இம் மன்றம் உளமாரப் பாராட்டுகிறது.
அதேவேளையில் இக்கல்லூரிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி அப்பணியிடத்தில் புதிதாக உதவி பேராசிரியர்களை நியமித்து மாணாக்கர்கள் நலன் காத்திட வேண்டுமெனவும்,
முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை மாணாக்கர்கள் நலன் கருதி உடனடியாக நிரப்பிட வேண்வேண்டுமெனவும்,
கல்வியியல் கல்லூரிகள் உட்பட 171 அரசு கல்லூரிகளில் 7000 க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் மாணாக்கர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. ஆகவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை உரிய வகையில் விரைந்து நிரப்பி, உயர்கல்வியை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களுக்கு அறிவியல் பாடப் பிரிவுக்கு ரூபாய் 1080 மற்றும் கலை பிரிவுக்கு ரூபாய் 800 என அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது.
ஆனால் பெற்றோர் ஆசிரியர் கழகம் கட்டணமென மாணாக்கர்களிடம் ஒவ்வொரு கல்லூரிகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஏழை எளிய மாணாக்கர்களின் கல்வி வாய்ப்பை பாதிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு இந்த கட்டண சுமையை உடனே தடுத்து நிறுத்தி மாணாக்கர் நலன் காத்திடுமாறு மன்றம் கேட்டுக்கொள்கிறது.
அரசு கலைக் கல்லூரிகளில் 1998 ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பனி மூப்பு பட்டியலில் எழுந்துள்ள சர்ச்சைகளை சரி செய்து காலியாக உள்ள இரண்டாம் நிலை கல்லூரி முதல்வர் பணியிடங்களில் நிரப்பிட வேண்டுமென மன்றம் கேட்டுக்கொள்கிறது.
அரசு கலைக் கல்லூரியில் 2000 ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களில் ஒன்று பின்னடைவு பணியிடங்களை நிரப்புதல் பிறிதொன்று பொதுநிலை முறை ஆகும் தற்போது இவ்விருவரிடையே யார் பணியில் மூத்தவர் என்று வருகை பதிவேட்டிலும், துறைத் தலைவராவதிலும், முதல்வர் பொறுப்பு வைப்பதிலும் பல கல்லூரிகளில் சிக்கல் எழுகிறது ஆகவே, அதை தவிர்க்கும் பொருட்டு 2000 முதல் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணி மூப்பு பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டுமென தமிழக அரசை மன்றம் கேட்டுக்கொள்கிறது.
எம்ஃபில், பிஎச்.டி முடித்தவர்களுக்கு UGC இன் 18.07.2018 நெறிமுறைப்படி ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசு ஓர் கடிதத்தை (64589651/எச் 1/2023-1 Dated 22.05.2023)
வெளியிட்டு அக்கடிதத்தில் 01.01.2016 க்குப் பின் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை என அரசாணை 5 உயர் கல்வித்துறை (எச்.1)நாள் 11/01 2021 பத்தி எண் 191-ஐ மேற்கோள்காட்டி கூறப்பட்டுள்ளது இருப்பினும் ஆசிரியர்கள் நலன் கருதி அதில் திருத்தம் செய்து மீண்டும் எம்ஃபில்,பிஎச்.டி முடித்த தகுதியான ஆசிரியர்களுக்கு ஊக்கு ஊதியம் வழங்கிட வழிவகை செய்யுமாறு தமிழக அரசை மன்றம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
அரசு கல்லூரியில் UGC பரிந்துரைக்கேற்ப(அரசாணை 350) பேராசிரியர் பதவியினைத் தோற்றுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மன்றம் கேட்டுக் கொள்கிறது.
கல்லூரி ஆசிரியர்களுக்கு யூஜிசி நெறிமுறைகள் 2018இன் படி பணி மேம்பாடு(CAS) வழங்கிட உரிய வழிவகை செய்ய வேண்டுமென தமிழக அரசை மன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை 11.1.2021 அன்று G.O.(M.S)No.5-1 வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைக்கான கல்லூரி கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறையினை வெளியிட வலியுறுத்தி மன்றம் கோரிக்கை (மன்ற மடல் எண் 61,62,64 dated: 5.2.2021) வைத்தது.
அதன் அடிப்படையில் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்களால் அதற்கான (R.C.No. 28377/J1/2018,dated:
4.5.2021) மேற்குறித்த செயல்முறையை உடன் வெளியிட்டமைக்காகத் தமிழக அரசுக்கு மன்றம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த காலங்களில் CAS க்கான அரசாணையும், அந்த அரசாணைக்கான கல்லூரி கல்வி இயக்குநரின் செயல்முறை கடிதமும் வர கால தாமதமானதால் பழைய நடைமுறை விதிகளைப் (UGC Regulation 20092010) பின்பற்றி கல்லூரி ஆசிரியர்கள் அவ்வ காலத்திற்கான புத்தாக்க பயிற்சிகளை(Refresher course) முடித்து வைத்திருந்தனர். தற்போது UGC -2018-Regulation-1 பின்பற்றி புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது(G.O.S)உதவி பேராசிரியர் இணை பேராசிரியர் ஆவதற்குரிய
காலத்திற்குள் (மூன்றாண்டு காலத்திற்குள்) ஒரு புத்தாக்க பயிற்சியையும் , முனைவர் பட்டத்தை அவசியம் முடித்திருக்க வேண்டும் என அந்த அரசாணை கூறுகிறது. அவ்வரசாணை வெளி வருகிற காலம் வரை 2007, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பழைய விதிமுறைகளின் படி தகுதிகளை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் இணை பேராசிரியராக ஆவதற்குக் கூடுதலாக ஒரு புத்தாக்க பயிற்சியை (Refresher course) முடித்துக் கொள்ள 31.12.2024 வரை காலநீட்டிப்பு வழங்கியுள்ளது. ஆகவே புத்தாக்க பயிற்சி உரிய காலத்திற்குள் முடிக்காத மேற்குறித்த ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC Notification) அறிவித்ததற்கிணங்க 31.12.2024 வரை கால அவகாசமும், முனைவர் பட்டத்தை முடிக்க ஆசிரியர்களுக்கு ஆறு ஆண்டுகள் கால அவகாசமும் (கல்லூரி முதல்வர் ஆவதற்கு முனைவர் பட்டம் அவசியமெனவும், அதனைப் பெறாத ஆசிரியர்கள் ஆறு ஆண்டுகளுக்குள் முனைவர் பட்டத்தை பெற வேண்டுமெனவும், 3.10.2005(G.OMS.NO.345 Higher Education (HT) இல் கால அவகாசம் வழங்கியது போல) அனுமதி அளித்து அதற்கான ஆணைகள் பிறப்பித்து உதவுமாறு மன்றம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
அரசு கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தில் சமூக நீதி அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவில் நிரப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு அதுவரை அவர்களுக்கு UGC அறிவித்துள்ள அடிப்படை ஊதியமான ரூ.57700/- ஐ வழங்க வேண்டும் என மன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சுமார் 480 PTA கௌரவ விரிவையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமான ரூபாய் 6000 முதல் 10 ஆயிரம் வரை எட்டு மாதங்களுக்கு மட்டுமே மாணவர்களிடமிருந்து பெறக்கூடிய பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணத்தின் மூலம் அந்தந்த கல்லூரி முதல்வர்களே வழங்கி வருகிறார்கள் முழுத்தகுதியுடன் பிஎச்.டி மற்றும் SET NET முடித்தவர்கள் உயர்கல்வியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களினுடைய நலனுக்காகவும் உழைத்து வரக்கூடிய இவர்களை காலியாக உள்ள இடங்களில் கௌரவ விரிவுரையாளராக நியமித்து தற்பொழுது கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கி வரும் ஊதியமான ரூ.25000/- ஐ அரசே வழங்க வேண்டுமெனவும் அவர்கள் பணியாற்றிய காலத்திற்கு உரிய பணி அனுபவச் சான்றையும் (Experience certificate) வழங்க வேண்டும் என மன்றம் கேட்டுக்கொள்கிறது.
