தேனாம்பேட்டை:தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் அமைச்சுப் பணியாளர்களுக்கென தனி அமைப்பு ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்பப் பணியிடங்கள் 38 குறைக்கப்படுவது பெருந்திரள் முறையீடு மூலம் முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் அரசு செயலருக்கு முறையீடு அனுப்புதல்,தமிழ்நாடு அரசு, பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அமைச்சுப் பணியாளர்களுக்கௌ தனி அமைப்பு உருவாக்குவதற்காக 38 தொழில்நுட்ப பணியிடங்களை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் அவசர மாநில செயற்குழுவின் முடிவின்படி, பணியிட குறைப்பை தடுக்கக் கோரி முதல்வர், துணை முதல்வர், தலைமை செயலர் மற்றும் அரசு செயலருக்கு பெருந்திரள் மூலம் முறையீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அமைச்சுப் பணியாளர்களுக்கென தனி அமைப்பு தோற்றுவிப்பதற்காக 38 தொழில்நுட்ப பணியிடங்களை குறைத்து அரசாணை 118 வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் குறைப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு 23.08.2025 அன்று திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இப்பணியிடங்கள் குறைப்பை தடுக்கக் கோரி, 25.08.2025 அன்று அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர். அரசு செயலர் மற்றும் துறையின் முதன்மை செயலர்/ஆணையருக்கு மனு அனுப்புவது, 29.08.2025 அன்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிவது, கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 09.09.2025 அன்று துறைத் தலைமையிடத்தில் பெருந்திரள் முறையீடு செய்வது என மூன்று கட்ட இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இரண்டு கட்ட இயக்க நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த 04.09.2025 அன்று துறையில் முதன்மை செயலர்/ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பணியிடங்கள் குறைப்பை தவிர்ப்பது தொடர்பாக எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படாததால், கோரிக்கைகள் தொடர்பாக பெருந்திரள் முறையீடு மேற்கொள்ளப்பட்டு, துறையின் முதன்மை செயலர்/ஆணையர் அவர்கள் மூலமாக முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர், அரசு செயலர் ஆகியோருக்கு முறையீடு அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு, 2013ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணை 8-இல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டிருந்தாலே போதுமானது. அதற்கென அத்தியாவசியமான பணியிடங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த பத்தாண்டுகளில் நிர்வாக வசதிக்காக புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்கள், 19 கோட்டங்கள் மற்றும் 3 வட்டாரங்களில் புள்ளிஇயல் துறை பணியிடங்களும் அலுவலகங்களும் இதுவரை தோற்றுவிக்கப்பட்டவில்லை. பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே பணியிடங்கள் இழப்பு, பணியாளர் பற்றாக்குறை என கடும் நெருக்கடியில் பணிபுரிந்து வரும் இத்துறை பணியாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மேலும் பணியிடங்களை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டு 1 மாதம் கடந்தும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. நடவடிக்கைகளும் வெளிப்படையாக இல்லாமல் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அரசாணை பெறுவதற்காக பல தவறான ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. ஏற்கனவே அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக உள்ளதாவும் தெரிகிறது. எனவே முதல்வரும் இத்துறையின் அமைச்சரான துணை முதல்வரும் தலையிட்டு, தொழில்நுட்ப பணியிடங்கள் குறைப்பதை தடுத்து, இத்துறையின் தொழில்நுட்பத் தன்மையை பாதுகாக்கவும் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி, அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்விற்கு சுமூக தீர்வு காணவும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள், கோட்டங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு புதிய அலுவலகங்களும் பணியிடங்களும் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசிற்கு தவறான தகவல்கள் அளித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இச் சங்கத்தின் பெருந்திரள் முறையீடு என்பது நடைபெற இருந்த நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு முத்தையா தெரு சமுதாய கூடத்தில் தங்க வைத்து இரவு 7 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில/மாவட்ட நிர்வாகிகள் இயக்கத்தின் இடத்திற்கு வந்து கோரிக்கை வெற்றிபெற வாழ்த்தி பேசினர்.
