சென்னை : ஏப்ரல்,21,2020 இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களிடம் 4-வது முறையாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அதிரடியாக அறிவித்தார்.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.75 சதவீதம் ஆக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரட்டிப்பாக மாறுவது ஊரடங்கிற்க்கு முன் 3.4 நாட்களாக இருந்தது. தற்போது 7.5 நாட்களாக உள்ளது.
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் தனது பேட்டியின் போது தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு நேர் எதிராக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது அதிகரித்து வருகிறது. தங்களது இன்னுயிரையும் பற்றி கவலைப்படாமல் மக்கள் பணியாற்றி வரும் காவல்துறையினர், மருத்துவத்துறையினர், ஊடகவியலாளர்கள் கூட இந்த கொரோனா தொற்றால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது மிகுந்த வேதனையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு தொடர்ந்து கூறி வரும்நிலையில், கோடை காலம் தொடங்கியுள்ளதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் காலி குடங்களை எடுத்துக் கொண்டு வீதி வீதியாக அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் லாரிகள் மூலம் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதால், தங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் முண்டி அடித்து கொண்டு சமூக விலகலை பின்பற்றால் தண்ணீர் பிடிக்கும் அவலம் நடந்தேறி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லாரிகள் மூலம் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், இதே நிலை தான் உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் என நீர் ஆதாரங்கள் அனைத்திலும் போதுமான தண்ணீர் இருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அப்படி இருக்கும் போது ஏன் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யாமல், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தை மீண்டும் செய்யப்படுகிறது எனும் கேள்வி அனைவரது மத்தியிலும் எழுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும், இந்த வேளையில் லாரி மூலம் குடிநீர் வழங்குவதற்கு பதிலாக குழாய் மூலம் மக்களுக்கு குடிநீரை குறிப்பிட்ட நேரத்திற்காவது தமிழ்நாடு குடிநீர் வாரியம் வழங்க வேண்டுமென என வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.
