தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண மானியம் அளிப்பது போல எங்ளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் : தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை : ஜூன், 14
தென்னிந்திய நடன மேடை கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை கண்ணதாசன் நகரில் கொரோனா தொற்று தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் கே.பாலாஜி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அச்சங்கத்தின் மாநில தலைவர் பாலாஜி கூறியதாவது:
கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் உள்ள இந்த இக்கட்டான நேரத்தில் நடன மேடை கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த 6 மாத காலங்களில் தான் திருவிழா காலம் இந்த நேரத்தில் தான் எங்கள் வாழ்வாதாரமானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் கூறிய அவர் நாங்கள் நடனம் ஆடினால் தான் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு உண்ணமுடியும் என்றும்,
இதில் வரும் சொற்ப வருமானத்தை நம்பி தான் எங்கள் குடும்பமே வாழ்ந்து (வாழ வைத்து) கொண்டிருக்கிறது. ஆனால் தற்பொழுது எந்த வருமானமும் இல்லாமல் தவித்து வருவதால் தமிழக அரசு தங்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண மானியம் அளிப்பதுபோல தங்களுக்கும் குறைந்தது 5000 மானிய நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் இது குறித்து தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
