சென்னை: ஏப்ரல், 26
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு 824 ஆக அதிகரித்துள்ளது. எனினும் வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் சனிக்கிழமை காலை 8.00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 விழுக்காடாக காணப்படுகிறது.
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்களிடையே இருந்த கையிருப்பு கரைந்து, பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்து வருகின்றனர். தமிழகத்தில் மார்ச் இறுதியில் இருந்து, வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர். இதனால், பலரும் செலவுகளை சமாளிக்க, தனியாரிடம் அதிக வட்டிக்கு, கடன் வாங்குகின்றனர். கந்து வட்டியிலிருந்து தமிழக மக்களை காக்கும் பொருட்டு 2003ம் நவம்பர் 14ம் தேதி கந்து வட்டி தடுப்பு சட்டத்தை அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்தார். தற்போது அம்மா ஆட்சி நடத்தி வருவதாக கூறும் ஆட்சியாளர்கள், தற்சமயம் வருமானமின்றி தவித்து வரும் மக்களை கொரோனாவிட கொடிய கந்து வட்டியில் சிக்கி வருகின்றனர்.
தற்போது கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், டி.என்.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சிறப்பு நகை கடன் திட்டத்தை, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கொரோனா சிறப்பு நகை கடன் என்ற புதிய திட்டம் 2 தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நகை கடன் திட்டத்தில் பரிசீலனை கட்டணம் 1 சதவீதம் மற்றும் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுவது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. வருவாயின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களிடம் நகை கடன் திட்டத்தில் இது போன்ற கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
நகரங்களில் மட்டும் உள்ள சிறப்பு நகை கடன் திட்டத்தை கிராம புறங்களிலும் விரிவுபடுத்துவதோடு, கந்து வட்டி கொடுமையில் இருந்து மக்களை காக்க இச்செயல் ஈடுபடுவோரின் சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்தார்
