சென்னை:
பர்சை தொலைத்த நபரிடமே அதை கொண்டு சேர்த்து ஒட்டு மொத்த சென்னைக்கும் பெருமை சேர்த்துள்ளார் 7 வயது சிறுவன் ரித்விக் நிவான்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்மில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சேட்டன் சோமன். இவர் குடும்பத்தினருடன் சென்னைக்கு சுற்றுலா வந்துள்ளார். நேற்று சென்னை செம்மொழி பூங்காவை சுற்றிப்பார்க்க சென்றபோது தனது வாலட்டை தொலைத்துவிட்டார் சோமன்.

பின்னர் பூங்காவிற்குள் சென்ற இடத்தில் எல்லாம் தனது வாலட்டை தேடி அலைந்துள்ளார்.

உடன் வந்தவர்கள் சென்னையில் தொலைத்தது கிடைக்காது என கூறி அவரை தேற்றி அனுப்பியுள்ளனர். ஆனால் சோமனின் வாலட் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் சிறுவன் ரித்விக் நிவான் கையில் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் உதவியுடன் தொலைத்தவரிடமே சேர்த்துள்ளார் ரித்விக்.தனது வாலட்டை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த சோமன் சிறுவனுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.