சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் அரங்கில் நடைப்பெற்றது


மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:சென்னை மாநகரத்தின் இதயப் பகுதியாக இருக்கும் எழும்பூரில் சமூகப்பணிக்காகச் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் சென்னை சமூகப்பணிக் கல்லூரி. விளிம்புநிலை மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்குமான சரணாலயமாக நிமிர்ந்து நிற்கிறது. ஆலமர விழுதுகளைப் போல இங்குப் படித்த மாணவர்கள் சூழலியல் சார்ந்த சமூகத் தொழில் முனைவோராக, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற மனிதர்களுக்கான இல்லங்களை நடத்தும் மனிதநேயமிக்கவராக, அலைபேசி வழியாகவும் மனநல ஆலோசனை வழங்கும் ஆலோசகராக, இந்திய ஆட்சிப் பணியாளராக, மனிதவள மேலாண்மைத் துறை வித்தகராக, திரை நட்சத்திரங்களாக என்று பரிணாம வளர்ச்சி பெற்றுக் கல்லூரியின் பெருமையை உணர்த்தி வருகின்றனர்.

தேசியத்தர மதிப்பீட்டில் A+ தகுதியும், கல்லூரிகளுக்கான NIRF(2022) தரவரிசையில் 38-ஆம் நிலையிலும், சிறந்த சமூகப்பணிக் கல்லூரிகளில் இந்தியாவிலேயே 4-வது இடத்தையும் பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் இக்கல்லூரி, பத்மவிபூஷன் மேரி கிளப் வாலா ஜாதவால் 1952-ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் சமூகப்பணிக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. கல்லூரி தன் வைரவிழா ஆண்டிலிருந்து(2012) வாழ்நாள் முழுவதும் சேவையாற்றுவதை இலட்சியமாகக் கொண்ட தன் நிறுவனரின் பெயரில் தகவுரையுடன் கூடிய ஒரு லட்சம் ரூபாய் என்ற தொகையிலான எம்.சி.ஜெ. விருதைச் சமுதாயத்திற்குச் சிறந்த முறையில் தொண்டாற்றும் சமூகப்பணியாளர்களுக்கோ அமைப்புகளுக்கோ வழங்குது குறிப்பிடத்தக்கது.

இங்கே அரசின் சமூகக் கொள்கைகளை, மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை ஆராய அதற்கான கள ஆய்வுகளையும், பெருநிறுவனத்தின் சமூகப் பொறுப்பை உறுதி செய்யும் முறையில் அதற்கான திட்டத்தையும் மாணவர்களே மேற்கொள்வது பாராட்டுதற்குரியது.

மேலும் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக ‘சமுதாயக் கல்லூரி’யை நிறுவும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி மையமாகவும் திகழும் இக்கல்லூரி கிராமப்புறத் தற்கொலைகளுக்கு எதிராகப் போராடி வருகிறது. மனிதநேயச் சமூகம் காண பணியாற்றும் கல்வி நிறுவனம் தற்போது எழுபதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். ராஜா சாமுவேல், டீன் ஆர். சுபாஷினி, சமூக தொழில் முனைவு துறைத்தலைவர் ஆன்டனி ஸ்டீபன், திட்ட தொடர்பாளர், ஜெய்ஸ்ரீ சேட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.