வழக்கறிஞர்களின் போராட்டத் தீப்பொறி 3 குற்றவியல் சட்டங்களைப் பொசுக்கும்:
மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

சென்னை: திமுக சட்டத்துறை சார்பில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடைப பெற்றது.

இந்தப் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசிய போது:வழக்கறிஞர்களின் போராட்ட தீப்பொறி 3 புதிய குற்றவியல் சட்டங்களை பொசுக்கும் மக்களின் மகத்தான இயக்கத்தை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது: இந்தியா மீண்டும் ஒரு அடிமை நாடாக மாறி விடக்கூடாது என்பதற்காக இந்தப் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் தொடங்குகிற போராட்டத்தை தொடக்கத்தில் கேலி செய்தாலும், இறுதியில் அது இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக மாறிவிடுகிறது. தமிழகத்தில் தொடங்கிய நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம், குஜராத், பீகார், ராஜஸ்தான் என வலுவடைந் துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பல மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள் ளன. குற்றவியல் சட்டங்களை வீழ்த்த நடைபெறும் இந்தப் போராட்டம் நாளை இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். அதற்கு பாஜக அரசு பதில் சொல்லத்தான் போகிறது.

சமஸ்கிருதத் திணிப்பை ஏற்காது சட்டத்தின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

ஒன்றிய அரசு வழக்கறிஞர் சமஸ் கிருத பெயரை ஆங்கிலத்தில் தான் எழுதியுள்ளோம் என்கிறார்.

அறிவு கெட்டவன் என்று ஆங்கிலத்தில் எழுதினால் அது ஆங்கில வார்த்தையாகி விடுமா? எத்தகைய கேடு கெட்ட ஆட்சியாக உள்ளது?

வந்தே பாரத், தேஜஸ் என்று ரயில் விட்டார்கள். இப்போது அரசியலமைப்பு சட்டங்கள் பெயரை சமஸ்கிருத பெயரில் வைக்கி றார்கள். இந்தி, சமஸ்கிருதத்தை நாடாளுமன்றத்தில் மறைமுகமாக திணிக்கிறார்கள். இந்தி திணிப்பு எந்த வகையில் வந்தாலும் அதை தமிழ்நாடு, இந்தியா ஒருபோதும் ஏற்காது.

விவாதிக்கத் தயங்குவது ஏன்?

1860ஆம் ஆண்டு சட்டங்களை திருத்துகிற போது தேசிய அளவில் விவாதம் நடத்தி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், சட்ட ஆணையத்தின் கருத்துக்களை கேட்டு முடிவெடுத்திருக்க வேண்டும். 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைத்து விவாதிக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் தயங்குவது ஏன்?

இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் இயக்கத்தை ஒடுக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளை பறிக்க வேண்டும், பத்திரிகை சுதந்திரத்தை முடக்க வேண்டும், ஊடகங்களை அடி மையாக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும். பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையை பறித்து பாசிச ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று பாஜக முயற்சிக்கிறது.

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் பரவியதுபோல், பாஜகவை வீழ்த்த தமிழகத்தில் உருவான கூட் டணி, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியாக மாறியது போல், இந்த 3 சட்டங்களை எதிர்த்து போராட்டம் நாளை நாட்டையே கொந்தளிக்க வைக்கும். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளனர். திருச்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திரள உள்ளனர். வழக்கறிஞர்கள் தொடங்குகிற போராட்டத் தீப்பொறி 3 புதிய சட்டங்களை பொசுக்குகிற மக்களின் மகத்தான இயக்கத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.