சமூக சமத்துவத்திற்கான  டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சேப்பாக்கத்திலுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.
மேலும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மருத்துவர் ஜி. ஆர். ரவீந்திரநாத் அவர்கள் பேசியதாவது:
அரசு உதவி மருத்துவர்கள் பணியிடங்களுக்கான மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் (எம்.ஆர்.பி ) தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளை , ஜூன் 30 க்கு நீட்டிக்க வேண்டும்,
எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டது.

மேலும் அவர் பேசுகையில்
அரசு உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான ,மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் (MRB) தேர்வு
ஒவ்வொரு ஆண்டும்  கடந்த காலத்தில் நடத்தப்படவில்லை,
எம்.ஆர்.பி  தேர்வு 2018 ற்குப் பிறகு,
2023 ல்‌ ஐந்தாண்டுகள் கழித்தே
1021 அரசு உதவி மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்பிட நடத்தப்பட்டது‌,
அந்த தேர்விற்கு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள்  விண்ணப்பித்திருந்தனர். இது மருத்துவர்களிடையே உள்ள கடும் வேலையில்லா திண்ட்டாடத்தைக்  காட்டுகிறது,
இந்நிலையில் , தற்பொழுது தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 அரசு உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்பிட உள்ளது.அதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வை நடத்த உள்ளது. அதற்கான
அறிவிக்கையை 15.03.2024   அன்று  வெளியிட்டுள்ளது.2553 காலிப் பணியிடங்களை நிரப்பிட, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது  மிகவும் பாராட்டுக்குரியதும் வரவேற்புக்குரியதாகும்.

ஆனால், எம்.ஆர்.பி வெளியிட்டுள்ள,
இந்த அறிக்கையில் , இத்தேர்வை எழுதுவதற்கு , விண்ணப்பிப்
பதற்கான இறுதி நாளாக
15 .05 .2024  நிர்ணயிக்கப்
பட்டுள்ளது , பயிற்சி மருத்துவர்களுக்கிடையே வருத்தத்தை அளித்துள்ளது.

ஏனெனில், மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். பயிற்சி மருத்துவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

இதனால்,  தற்பொழுது தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவத்தை மேற்கொண்டு வரும் ,எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், இத்தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

அவர்கள் மே மாத இறுதியில் தான் தங்களது பயிற்சியை முடிக்கின்றனர்.

அதன் பிறகே மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திட முடியும்.

மருத்துவர்கள் மத்தியில் வேலை இல்லாத திண்டாட்டம்,  அதிகரித்துள்ள நிலையில் , இந்த பயிற்சி மருத்துவர்களும் நடைபெற உள்ள எம்.ஆர்.பி தேர்வை எழுத விரும்புகின்றனர். அதற்கேற்ற  வகையில்,  விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை 30.06.2024 ஆக நீட்டிக்க,தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

இதன் மூலம்,  மே மாதம் இறுதியில் பயிற்சி மருத்துவத்தை முடிக்கும்  பயிற்சி மருத்துவர்கள்,  தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்று, எம்.ஆர். பி தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும்.

மருத்துவக் கவுனிசிலில் பதிவு செய்ய சில வாரங்களாவது ஆகும்.

மேலும் தேர்தல் காரணமாக MRB தேர்வை ,மே மாதம் நடத்த முடியாத சூழலும் உள்ளது .

எனவே தற்போது பயிற்சி மருத்துவத்தை மேற்கொண்டு வரும்,8 ஆயிரம் பயிற்சி மருத்துவர்களின் நலனை கருத்தில் கொண்டு ,
இத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளை,  15.05.2024 லிலிருந்து , 30.06.2024 க்கு நீட்டிக்க வேண்டும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

8000 பயிற்சி மருத்துவர்கள் பயனடைவர். எனவே
தமிழ்நாடு அரசும், எம்.ஆர்.பி யும் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால நீட்டிப்பைச் செய்திட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

எ.ஆர்.பி தேர்வை  எழுதும் மருத்துவர்கள் அனைவரும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில்,ஒரே வினாத்தாளுடன் ,ஒரே தேர்வாக ( One Session ,) எழுதும் வகையில் நடத்த வேண்டும். தவணை முறையில் இரண்டு மூன்று முறையாக தேர்வு நடத்துவதை (Multiple Sessions) கைவிட வேண்டும். இதன் மூலம், சீராக்குதல் ( Normalisation) உள்ளிட்ட பல சிக்கல்களை தீர்க்க முடியும்.  

ஒரே நேரத்தில் லட்சக்கணக் கானோர்  தேர்வு எழுதும் வகையில்,  அறிவியல் தொழில்நுட்ப
வளர்ச்சியை‌ பல ஆண்டுகளுக்கு முன்னரே நாம் எய்திவிட்டோம்.
இந்நிலையில் , வெறும்
25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே பங்கு பெறும் ஒரு தேர்வை , பல கட்டமாக நடத்துவது என்பது பல்வேறு ஐயங்களை‌‌யும், அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்துகிறது.

எனவே எம்.ஆர்.பி தேர்வை  ஒரே தேர்வாக ,ஒரே கட்டத்தில் மட்டுமே நடத்தவேண்டும்.
எம்.ஆர்.பி தேர்வு முடிவுகளை வெளியிடும் பொழுது, பட்டியலில், தேர்ந்து எடுக்கப் பட்டவர்களின் பெயருடன் , அவர்களின் இட ஒதுக்கீடு வகுப்புப் பட்டியல் வெளியிடப்‌படுவதில்லை. இதனால்  இட ஒதுக்கீடு தொடர்பான ஐயங்கள் எழுகின்றன .எனவே தேர்வானவர்கள் பெயருடன் அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தை குறிப்பிட்டு‌ ,பொது ரேங் (General Rank)
கம்யூனிட்டி ரேங்  ( Community Rank ) விவரங்களுடன் பட்டியலை வெளியிட வேண்டும்.இதன் மூலம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள முடியும். எனவே, இத்தகைய நடைமுறையையும் பின்பற்றிட வேண்டும்.
தமிழ் வழியிலோ அல்லது தமிழை ஒரு மொழிப் பாடமாகவோ 10 ஆம் வகுப்புவரை படித்து,அத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அரசுப்பணிக்கான எம்.ஆர்.பி தேர்வில் நடத்தப்படும் தமிழ் தேர்வை எழுதுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
எம்.ஆர்.பி தமிழ்த் தேர்வை, பட்டப்படிப்பு அளவிற்கு கடினமான ஒன்றாக நடத்துவது சரியல்ல. இதன் மூலம் பல திறமையான மருத்துவர்கள் அரசுப் பணிக்கு வர
முடியாத நிலை ஏற்படுகிறது. மருத்துவர்களின்,  வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களை ஒப்பந்தம், தற்காலிகம் மற்றும் அவுட் சோர்சிங் முறைகளில்  பணி நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கக் கூடாது. ஓய்வு பெற்ற மருத்துவர்களை, மீண்டும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ,தற்காலிக அடிப்படையில் ,
பணி நியமனம் செய்யக்கூடாது .இது இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறித்து விடுகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஒன்றிய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் உச்ச பட்ச வயது வரம்பு 75 ஆக கடந்த பல ஆண்டுகளாக உள்ளது.  இதை 60 ஆக ஒன்றிய அரசும், தேசிய மருத்துவ ஆணையமும் குறைக்க வேண்டும்.  பேராசிரியர், உதவிப் பேராசிரியர்  மற்றும்  முதுநிலை மருத்துவ மாணவர் விகிதத்தை 1:1ஆக மீண்டும் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட  அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஓய்வு பெற்ற மருத்துவர்களையும் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில்,  நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவர்களுக்கான புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் .அவற்றில் நிரந்தர அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் .அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்களின் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
காலதாமதம் இன்றி ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ,நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு (Non Academic Medical Officer) மருத்துவர்களுக்கான புதிய பணியிடங்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உருவாக்க வேண்டும்.
இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை முற்றிலும் பறிக்கும்  வகையில் , தேசிய மருத்துவ ஆணையம் ( NMC)  மூலம் ஒன்றிய அரசு, முதுநிலை மருத்துவ
மாணவர்கள் ,தங்கள் படிப்புக் காலத்தின் பொழுதே , மூன்று மாதகாலம், மாவட்ட , வட்டார மருத்துவமனைகள் ,ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் இதர மருத்துவமனைகளில்  கட்டாயம் வேலை செய்ய வேண்டும் 
( District Residential Programme -DRP)  என்ற திட்டத்தை நடைமுறைப் படுத்திவருகிறது.இது இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது.
இது மருத்துவக் கல்வியின் தரத்தை வெகுவாக பாதிக்கச் செய்கிறது.
அதுமட்டுமன்றி இத்திட்டம் மாநில உரிமைகளுக்கும்,
நோயாளிகளின் உரிமைகளுக்கும்  எதிரானதாக உள்ளது.
எனவே இத்திட்டத்தை
கைவிட வேண்டும். உடனடியாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் தகுதியான இளநிலை , முதுநிலை படிப்பை , படித்து முடித்த மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். மருத்துவ மாணவர்களைக் கொண்டு சிகிச்சை வழங்குவது கூடாது.
சுகாதார மற்றும் நல வாழ்வு மையங்களில் ( Health and Wellness Centres ) ஆயுஷ்
( AYUSH)மருத்துவர்கள் நியமிக்கப்படுகின்றனர். கூடுதலாக
அந்த மையங்களில் நவீன அறிவியல் மருத்துவம் பயின்ற மருத்துவர்களையும்  நியமிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்குவதால், மருத்துவர்களின் அரசு வேலை வாய்ப்புகளும் பறிபோகிறது. எனவே, அத்தகைய முயற்சிகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது.இத்தேர்வை 25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இத்தேற்விற்கு,  ஹால் டிக்கெட் பெறுவதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். தேர்வை முறையாக நடத்திட வேண்டுமென, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி,  தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் எம்.அஜய் முகர்ஜி, பயிற்சி மருத்துவர்கள் அ.ஆசிக், சி.ஆஹாஸ், கே.அஜய் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.