சென்னை:ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக் கொடை அளித்து பணி ஓய்வு வழங்கிட வேண்டும்,
மகப்பேறு மருத்துவர்,குழந்தைகள் மருத்துவர், மயக்க மருத்துவர் அறுவை அரங்கம் ,இரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்கும் நிலையை உருவாக்கிட வேண்டும்,
வசதிகளற்ற ஆரம்ப சுகாதர நிலையங்களில் பிரசவம் பார்க்க கட்டாயப் படுத்திடக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005 ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.ஹெச் திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் 3140 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.
வாரவிடுமுறை, தேசிய விடுமுறை, மருத்துவ விடுப்பு என்று எந்த விடுமுறையும் இல்லாமல் தொடர்ந்து தினமும் 12 மணி நேரம் பணிசுமை என கடுமையான வேலையை செய்து வருகின்றனர். கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி
வருகின்றனர்.
அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சொற்ப ஊதியமாக வெறும 1,500 மட்டுமே மாத தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு,பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம்.
இவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்குவதாக மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் , அரசாணை (G.O M.S.No: 385நிதித்துறை 01.10.2010) மூலம் அறிவித்தார். அது நடைமுறை படுத்தப்படவில்லை.
பின்னர் 05.04.2017 தேதியிட்ட அரசாணை (GO (D) No:792-ன்படி மாவட்ட ஆட்சியர் மூலம் குறைந்த பட்ச ஊதியம் சட்டத்திருத்தப்படி, தினக்கூலி அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
இந்த ஆணையும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் பலக் கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு இவர்களில் ஒரு பகுதி தூய்மை பணியாளர்களை தற்காலிக பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக (MPHW)பணிநியமனம் செய்தது.
அவர்களின் மாத தொகுப் பூதியத்தை ரூபாய் 1,500 லிருந்து தோராயமாக ரூபாய் 15,000-மாக உயர்த்தியுள்ளது . இது வரவேற்புக்குரியது.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கான, காலிப் பணியிடங்கள் உருவாகும் பொழுது, எஞ்சியுள்ள ஆர்.சி.ஹெச் தூய்மை பணியார்களையும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக, பணி நியமனம் செய்து, ஊதிய உயர்வு வழங்குவதாக
தமிழ்நாடு அரசு உறுதியளித்தது. இதுவும் வரவேற்புக்குரியது. ஆனால்,இவ்வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சுணக்கம் போக்கப்பட வேண்டும்.
கீழ்கண்ட நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த 05.06.2023 அன்று வெளியிட்ட அரசாணை 604 மற்றும் 03.08.2023 ந.க எண்:3727981பதோ3/இரு3/2022 அன்று வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் 941 பணி இடங்கள் அனுமதிக்கப்பட்டு (Sanctioned) ஆகி உள்ளது. ஆனால் அதில் 841 பணியாளர்கள் பெயர்கள் மட்டுமே பட்டியலாக வெளியிடப்பட்டது,அந்த 841 இடங்களிலும் 7 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு . இன்னும் பணி ஆணை வழங்கப் படவில்லை. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டும், இன்றுவரை பணி கிடைக்காத ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகளை வழங்கிட வேண்டும். அதோடு, அவர்களுக்கு முன் தேதியிட்டு ஊதியம் வழங்கிட வேண்டும்,
மேலும் அனுமதிக்கப்பட்டுள்ள ( Sanction ) 941 பேரில் 100 பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவேயில்லை அவர்கள் பெயர்கள் அறிவித்து உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும்,
காத்திருப்பு பட்டியலில் உள்ள 547 நபர்களின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும், அவர்களுக்கும் விரைவாக பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக, பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும், மொத்தம் உள்ள 2000 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களில் வெறும் 1345 தூய்மை பணியாளர்கள் மட்டுமே. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆக தகுதி உள்ளவர்களாக அரசு அறிவித்துள்ளது. அரசாணை அடிப்படையில் தேர்வு பெறாமல் ஏறத்தாழ 946 பேர் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு தேர்வு பெற்றவர்கள் மற்றும் தேர்வு பெறாதவர்கள் அவர்களின் பெயர்,தேர்வு பெறாதவர்களுக்கு அதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களையும் உடனடியாக வெளியிடவேண்டும்,மொத்தம் உள்ள ஆர்.சி.ஹெச் தூய்மைப் பணியாளர்களில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளராக தேர்வான 1345 பேர் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத 946 நபர்களில் 60 வயது நிரம்பிய 210 போக 736 ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர் களையும், முடிந்த வரையில் அவர்களது நீண்ட கால பணியை கருத்தில் கொண்டு அவர்களுக்கும், பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக பணிநியமனம்
செய்திட வேண்டும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தபடி, 60 வயது நிரம்பிய 210 ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கொடை அளித்து பணி ஓய்வு வழங்கவேண்டும்,,அவர்களை 1500 ரூபாய் ஊதியத்தில் தொடர்ந்து வேலை வாங்குவதை தவிர்த்திட வேண்டும், அவர்களுக்கு 2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையையும் வழங்கி பணி ஓய்வு தரப்பட வேண்டும்,
ஆர்.சி.ஹெச்
தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,
வெவ்வேறு மாவட்டங்களில் மிகவும் வேறுபாடுகளுடன் ஊதியம் வழங்கப்படும் நிலை உள்ளது. தினக்கூலியாக 350 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.இது தவிர்க்கப்பட வேண்டும்.சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்.
குறைந்த பட்ச ஊதியச் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட தகுதி உள்ள பல R.C.H தூய்மைப் பணியாளர்களின் பெயர்கள் தேர்வு செய்யப் படவில்லை.அதே நேரத்தில் கடலூர் போன்ற சில மாவட்டங்களில் முறைகேடாக ஆர்சிஹெச் பணியையே செய்யாதவர்கள், பணிமூப்பு இல்லாதவர்கள், என சிலரின் பெயர் பட்டியலில் வந்து பணி வழங்கப் பட்டிருக்கிறது. தவறுதலாக மற்றும் முறைகேடாக வந்துள்ள பெயர்களை நீக்கிவிட்டு உரிய தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்களை பட்டியலில் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எழுதப் படிக்கத் தெரிந்து பள்ளிச் சான்றிதழை பெற இயலாத ஆர்.சி.ஹெச் தூய்மைப் பணியாளர்களுக்கு MPHW வேலை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு என்கிற விதிக்கப்பட்ட பணிகள் தவிர, ஊசி
போடுவது, கட்டு கட்டுவது போன்ற அவர்களுக்குத் தொடர்பு
இல்லாத பணிகளை செய்யச் சொல்லக்கூடாது. , தாமதம் இன்றி , உரிய நேரத்தில்
ஊதியம் வழங்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, தேசிய விடுமுறை அனைத்து இடங்களிலும் வழங்கப்பட வேண்டும். இப்பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் பணி மாறுதல் வழங்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்
துறையில் தினக்கூலி, ஒப்பந்த,தற்காலிக பணி நியமனங்களை கைவிடவேண்டும். தற்போது பணியில் உள்ள, தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த
பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட
வேண்டும்.
இக்கோரிக்கை
களை வலியுறுத்தி,
தமிழ்நாடு அரசு ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் வருகின்ற 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் (கடற்கரை ரெயில் நிலையம் எதிரில கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
இச் சங்கத்தின் தலைவர் முனைவ்ர் நா. சு. செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்மாநில நிர்வாகிகளான எஸ்.நிலா ஒளி, ஆர். சாரதா, எஸ். விஜியா, கே. தனசெல்வி ஆர் நல்லம்மாள் முன்னிலை வகிப்பர்.
A.I.T.U.C மாநில பொதுச்செயலாளர் எம். இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றுவார்.
தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி. காளிதாசன் ,
பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் எஸ். தனவந்தன், எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குவர்.
ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றுவார்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்
டாக்டர் G.R.இரவீந்திரநாத் நிறைவு உரையாற்றுவார்.
தமிழ்நாட்டில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பிற்கு,
பிரசவத்திற்கு பிந்தைய அதீதமான உதிரப்போக்கும், பிரசவத்தின் பொழுது ஏற்படும் திடீர் சிக்கல்களும்,
அவற்றை எதிர்கொண்டு தாய்மார்களை காப்பாற்றும் அடிப்படை வசதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லாத நிலையும் மிக முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
எனவே, மகப்பேறு மருத்துவர்,குழந்தைகள் மருத்துவர், மயக்க மருத்துவர் ,போதிய செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ள, அறுவை அரங்கம் ,இரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்கும் நிலையை உருவாக்கிட வேண்டும்.
மேற்கண்ட அடிப்படை வசதிகளற்ற ஆரம்ப சுகாதர நிலையங்களில் பிரசவம் பார்க்க கட்டாயப் படுத்திடக் கூடாது. தாய்மார்களின் நலன்களுக்கு எதிரான இத்தகையப் போக்கை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்
டாக்டர் ஏ. ஆர். சாந்தி , மாநிலத்தலைவர் என்.எஸ் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
