நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா எழதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கண்ணுக்குத் தெரிந்த கடவுளாக போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள். ஆனால் அறிவார்ந்த தமிழகத்தில் கொரோனாவால் அவலங்கள் நடந்தேறி வருகிறது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆந்திர மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் மற்றும் திருவேற்காடு பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பப்பட்ட சடலம் பின்னர் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதே போன்று நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடாவில் பணியாற்றி டெங்கு காய்ச்சலுக்கு பலியான மருத்துவர் ஜெயமோகனின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய கோவை சிறுமுகை அருகே உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு பலியான, நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், புகழ்பெற்ற நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் உடலை, கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது உடலை அடக்கம் செய்ய வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் மருத்துவர் சைமனின் உடல் உடல் வேலங்காடு இடுகாட்டில் காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதாக 21 பேரை அண்ணா நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இவர்களில் சிலர் தம் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது கவலை அளிக்கக் கூடிய செய்தியாக உள்ளது.
இந்நிலையில் கடையநல்லூரில் தனது உறவினர் இறுதி சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய மேலப்பாளையத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை அங்குள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்க மாவட்ட கலெக்டர் முடிவு செய்த போது, இதற்கு திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மக்களை திரட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவராக உள்ள பூங்கோதை ஆலடி அருணா இது போன்ற செயலில் ஈடுபடுவது கடும் கண்டனத்துக்குரியதாகும். இறந்தவர் உடலில் இருந்து கொரோனா பரவாது என உலக சுகாதார நிறுவனமே அறிவித்துள்ள நிலையில் , மரணித்த ஒருவரின் இறுதி சடங்குக்கு சென்று வந்தவர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ வின் செயல் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது .
மருத்துவர் என்பவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவரே தவிர, இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது மோசமான முன் உதாரணமாக அமைந்து விடும். ஆகவே இது போன்ற சம்பவம் இனியும் நடைபெறாத வண்ணம் பூங்கோதை ஆலடி அருணாவின் எம்எல்ஏ பதவியை சபாநாயகர் தனபால் அவர்கள் பறிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்வதோடு, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் பூங்கோதை ஆலடி அருணாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
(குறிப்பு : சபாநாயகர் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் அனுப்பபட்டது.)
