பெருமாள்பட்டு: ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா,
கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர். திரு. ஆர். நாராயணசாமி தலைமை வகித்தார். மேலும், செயலாளர் திரு. எம் .டி .ஜி. ராஜ்குமார் மற்றும் ஸ்ரீராம் கல்வி குழுமத்தின் அறங்காவலர்கள் திரு. பி. கோவிந்தராஜுலு, திருமதி. கஸ்தூரி பார்த்தசாரதி, இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முதுநிலை விஞ்ஞானி, திருமதி. எம்.ஸ்ரீதேவி (இஸ்ரோ, பெங்களூர்) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விழாவின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் முனைவர். பி.ஆர். ரமேஷ் பாபு அவர்கள் இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றதோடு, நமது கல்லூரி திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணா பல்கலை தேர்வில் இரண்டாவது இடம் பிடித்ததை பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், பட்டம் பெற வந்த மாணவர்களின் எதிர்காலத்திற்காக சில அறிவுரைகளை வழங்கி வாழ்த்தினார்.
இத்தகைய வளர்ச்சி பாதைக்கு வழி வகுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து அமர்ந்தார்.
இதனை அடுத்து பேசிய, ஸ்ரீராம் அறக்கட்டளையின் தலைவர், முனைவர். திரு. ஆர். நாராயணசாமி, விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று , இக்கல்லூரியின் கல்வி வளர்ச்சியை வெகுவாக பாராட்டினார். அதற்கு சான்றாக, சிறப்பு விருந்தினராக மட்டுமல்லாமல் இக்கல்லூரியின் முன்னாள் மாணவி என்ற பெருமையோடு இவ்விழாவிற்கு வருகை புரிந்த திருமதி. எம்.ஸ்ரீதேவி அவர்களுக்கு நன்றி தெரிவித்து, பட்டம் பெற வந்திருந்த மாணவர்களுக்கு உற்சாகத்தையும் புது ஊக்கத்தையும் தன் உரையின் மூலம் தெரிவித்தார். மேலும் , மாணவர்கள் பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல் தொழில் முனைவோராக மாற்றிக்கொள்ள தேவையான முயற்சிகளில் ஒழுக்கத்தோடு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி அமர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ,இவ்விழா ஒருங்கிணைப்பாளர், இயந்திரவியல் துறை தலைவர், முனைவர். திருமதி. ஜி. சுகன்யா , சிறப்பு விருந்தினரை வரவேற்று , விண்வெளி துறையில் அவர் படைத்த சாதனை பட்டியலை மாணவர்கள் முன் எடுத்துரைத்தார். சந்திராயன்-1,2 மற்றும் 3 என அனைத்திலும் தன் பங்களிப்பையும் வெற்றியையும் பதித்தவர் , என பெருமிதம் கொண்டார். இதேபோன்று, மாணவர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக திருமதி.எம். ஸ்ரீதேவி அவர்களை , ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளை குழுமத்தினர் மற்றும் கல்லூரியின் முதல்வர் என அனைவரின் சார்பிலும் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
பட்டமளிப்பு விழாவின் சிறப்புரையாக சிறப்பு விருந்தினர் திருமதி. எம்.ஸ்ரீதேவி, முதுநிலை விஞ்ஞானி ( இஸ்ரோ, பெங்களூர்) அவர்கள் கூறுகையில், “மாணவர்கள் தங்கள் வாழ்வின் உயர்வுக்கான பாதையை சரியோ தவறோ என்று சந்தேகிக்காமல் அதனை சவாலாக மேற்கொண்டு பயணிக்க வேண்டும்.
ஒவ்வொரு சவால்களும் புதிய அறிவை பெற்று தருவதோடு வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ” என மாணவர்களுக்கு உற்சாகம் தரும் உரையை நிகழ்த்தியதுடன் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அத்துடன், அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து மற்ற இடங்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் பரிசுகளையும் பாராட்டையும் வழங்கினார். மேலும், இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
விழாவின் இறுதியாக, கல்லூரியின் மின்னியல் துறை தலைவர் முனைவர். திரு. எஸ். கிருஷ்ணகுமார் அவர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவுற்றது.

