பெருமாள்பட்டு:ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரியின் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாகவும் , கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவராலும் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்விழாவிற்கு ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் தலைவர், முனைவர். ஆர். நாராயணசாமி அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி அறங்காவலர் மற்றும் செயலாளர் எம்.டி.ஜி. ராஜ்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் எம். ஸ்ரீனிவாசன், முன்னாள் மாணவர், துணை இயக்குநர் மற்றும் விஞ்ஞானி “F” பிரிவு (CVRDE,DRDO-
பாதுகாப்பு அமைச்சகம், இந்திய அரசு), கே. பாஸ்கரன், தலைவர் (IWMA) மற்றும் ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், சுரேஷ் முருகேசன், திட்ட மேலாளர்-நோக்கியா ஆப்டிக்ஸ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குத்துவிளக்கு ஏற்றலுடன் தொடங்கியது. இதில் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் ஏ. ராஜுவ், வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் மூன்றாமாண்டு மாணவிகள் பக்தி பாடல் பாடியும், சிறப்பு நடனத்தின் வழியாகவும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றனர்.
இவ்விழாவின் அடுத்த நிகழ்வாக கல்லூரிக்கு புதிய மாணவர்களை வரவேற்று, கணிதத்துறை உதவி பேராசிரியை கு .செல்வி அவர்கள் தமிழ் கவிதை வாசித்தார்.
இவ்விழாவின் போது கல்லூரி முதல்வர் முனைவர். பி.ஆர்.ரமேஷ்
பாபு அவர்கள் பேசியபோது, ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி கல்வி சேவையில் 33 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றதோடு எங்கள் கல்லூரி திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் இரண்டாவது இடம் பிடித்ததையும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் அவர் தலைமை விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் பெருமைகளையும், மாணவர்களின் பெருமைகளையும் பெற்றோர்களுக்கு எடுத்துறைத்தார். தமிழகத்தில் உள்ள 450 கல்லூரிகளில் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி விரைவில் தரவரிசையில் பத்தாவது இடத்துக்குள் வரும் என சூளுரைத்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய, ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் தலைவர். முனைவர். ஆர்.நாராயணசாமி அவர்கள் இக்கல்லூரி அனுபவங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் வேலைவாய்ப்பின் நிலைமையை விளக்கி கூறிவிட்டு, “குறிக்கோள்களை நோக்கி செல்லுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்” என்று அறிவுறுத்தி பேசினார்.
அவரைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு விருந்தினரான ஸ்ரீனிவாசன் பேசுகையில், நான் இக்கல்லூரியின் முன்னாள் மாணவன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் “காலம் பொன் போன்றது என்றும், அந்தக் காலத்தை வீணடிக்க கூடாது என்றும்,நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்கிற அப்துல் கலாம் அவர்களின் தாரக மந்திரத்தை கூறினார்.
மேலும் நான்கு வருடம் கடினமாக உழைத்தால், அடுத்த 40 வருடம் நிம்மதியாக வாழலாம் என்றும் கூறினார்.
அடுத்து பேசிய கௌரவ விருந்தினரான கே. பாஸ்கரன் அவர்கள் தனது அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் மாணவர்களிடம் “பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுங்கள்”, கல்லூரியில் ஆசிரியர்கள் கூறும் ஒழுக்கங்களை பின்பற்றுங்கள்” என்றும் அறிவுரை வழங்கினார். புதிய தொழில் தொடங்கும் எண்ணங்களை இப்போது இருந்தே வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுரை வழங்கினார்.
விழாவின் அடுத்த நிகழ்வாக கௌரவ விருந்தினர் சுரேஷ் முருகேசன் அவர்கள்.நான் இக்கல்லூரியில் 1999 ஆம் ஆண்டு படித்த மாணவன் என்பதை பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பெருமையுடன் கூறிவிட்டு மாணவர்கள் “கவனமுடன் படிக்க வேண்டும் என்றும் கைப்பேசியை கவனமுடன் தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். கைபேசி வழியாக கல்விக்கு தேவையான பல தகவல்களை எளிதில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்றும் அறிவுரை வழங்கினார். மாணவர்கள் தங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுரை வழங்கினார்.
அடுத்த நிகழ்வாக சிறப்பு விருந்தினர் எம்.சினிவாசன் அவர்களுக்கு ஆர். நாராயணசாமி, அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.
கௌரவ விருந்தினரான கே.பாஸ்கரன் அவர்களுக்கு முனைவர் பி. கோவிந்தராஜுலு, பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
மேலும் கௌரவ விருந்தினரான சுரேஷ் முருகேசன் அவர்களுக்கு டி. ஜி. ராஜ்குமார், அவர்கள் பொன்னாடை அணிவித்து கல்லூரி சார்பாக நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
விழாவின் சிறப்பு நிகழ்வாக நமது ஸ்ரீராம் கல்லூரியில் பயின்று அண்ணா பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் சுரேஷ் முருகேசன் அவர்கள் 1999 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக மின்னணுவியல் பொறியியல் துறை உதவி பேராசிரியை ஜி. ஆலின் ஜாய்ஸ் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
