காட்டாங்கொளத்தூர்: ஆகஸ்ட் 21, 2025: எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, தனது புதிய பொறியியல் மாணவர் சமூகத்தை அன்புடன் வரவேற்று, அவர்களின் கல்விப் பயணத்தின் முக்கியமான முதல் அத்தியாயத்தைத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான கனவுகளும், புதிய முயற்சிகளும் இலக்குகளும் நிரம்பிய இளம் உள்ளங்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் கல்லூரி வளாகத்தை அடைந்தனர்.
இக்கல்லூரி, மருத்துவ மின்னணுவியல் துறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் துறை, இணையப் பாதுகாப்புத் துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற புதுமையான துறைகள் முதல் சிவில் பொறியியல், இயந்திர பொறியியல், கணினி அறிவியல் பொறியியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல், மின்னணு மற்றும் கருவியியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாரம்பரிய பிரிவுகள் வரை பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது.

டி.பி. கணேசன் அரங்கில் நடைபெற்ற இந்த தொடக்கவிழா, குத்துவிளக்கு ஏற்றும் பாரம்பரிய நிகழ்வுடன் துவங்கியது.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி. ரோபியா ரோஸ், இணை இயக்குநர், மனிதவள மேம்பாட்டு குழு, (HR, Campus Recruitment Team) முனைவர் பி. சிதம்பரராஜன் (இயக்குநர், எஸ்.ஆர்.எம்.வி.இ.சி.), முனைவர் எம். முருகன் (முதல்வர்), முனைவர் எஸ். விசாலாட்சி (துணை முதல்வர்), முனைவர் எம். சித்ரா (முதலாம் ஆண்டு தலைமை ஒருங்கிணைப்பாளர்) மற்றும் இரு மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வரவேற்புரை நிகழ்த்திய துணை முதல்வர், புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்று, கல்லூரியின் பண்பாடு மற்றும் செயல்முறைகளை விளக்கி எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் கல்வியுடன் கூடிய முழுமையான பயணத்தை மேற்கொள்ளுமாறு மாணவர்களை ஊக்குவித்தார். கல்வி இயக்குநர் வாழ்த்துரையாற்றி, மாணவர்களுக்கு உந்துதலையும் அறிவுரைகளையும் பகிர்ந்து கொண்டார்.

இயக்குநர் தனது உரையில், மாணவர்கள் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, முன்னோக்கிய சிந்தனையை வளர்த்து, உடல் ஆரோக்கியத்துடனும் மன உறுதியுடனும் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான திருமதி. ரோபியா ரோஸ், இணை இயக்குநர், மனிதவள மேம்பாட்டு குழு, (HR, Campus Recruitment Team) கலந்து கொண்டு, கல்வி திறமையுடன் இணைந்து, தனிநபர் மேம்பாடு, நற்பண்பு வளர்ச்சி போன்ற திறன்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.
விழாவின் சிறப்பம்சமாக, முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களையும் சாதனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இறுதியாண்டு மாணவர்கள், தங்கள் இளைய சகோதரர்களுக்கு வழிகாட்டலையும் அறிவுரைகளையும் வழங்கினர். புதிய மாணவர்களும் தங்கள் பெருமையையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். பெற்றோர்களும் தங்கள் மனமார்ந்த உணர்வுகளை பகிர்ந்து நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
இறுதியாக முதலாம் ஆண்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் நன்றி உரையுடன் விழா இனிதே சிறப்பாக நிறைவுற்றது.