சென்னை:
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் கடந்த 11 நாட்களாக வாழ்வாதார போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளான சென்னை மாநகராட்சி மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண்-285ல் கூறியதைப் போல் ஊராட்சிகள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் பணிபுரிகின்ற 36,000 தூய்மை தொழிலாளர்களின் பணி நிரந்தரம், ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எதிர்காலத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு முழுக்க முழுக்க எந்திரங்களையே பயன்படுத்த வேண்டும். எந்திரங்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வருகின்ற வரை தூய்மை தொழிலில் 100% ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்.

தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதினால் அதில் பணியமர்த்தப்
படும் தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பதே இல்லாமல் போகிறது. எனவே மற்ற அரசு பணிகளைப் போல தூய்மை பணிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் அப்பொழுதுதான் அந்தத் தூய்மை பணியாளர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். எனவே இனிமேல் தூய்மை பணியை அரசு பணிகளாக நியமனம் செய்ய முடியாது என்கிற அரசின் கொள்கை முடிவான அரசாணை 152-ஐ நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.

தூய்மைப் பணிகளில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை தவிர்த்து எந்திரங்களை பயன்படுத்துவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அந்த இயந்திரங்களை இயக்குவதற்கு நியமிக்கப்படும் பணியாளர்களை 100% ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையில் நியமிக்க வேண்டும். தூய்மைப் பயணிகளை செய்வதற்கு தனியே ஒரு ஜாதி இருக்கிறது என்கிற பொதுச் சிந்தனையை அகற்றுவதற்கு இந்த ஜாதி அடிப்படையிலான 100 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்தார்.