போலீஸ் உதவி ஆய்வாளராக ராதாரவி அவரது மகள் பாரதி என்கிற ராஜலட்சுமி. அவருக்கு சிறு வயது முதல் தவறு செய்ப்பவர்களை கண்டாலே சுத்தமாக பிடிக்காது. அவர்களை சுட்டு தள்ள வேண்டும், கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சொல்வார். அதனால் தந்தையை போலவே போலீஸ் வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்படுவார்.
தன்னுடைய மகள் பாரதியின் அநியாயத்துக்கு எதிரான கோபம் அவரது வாழ்க்கையை வேறுபாதைக்கு திருப்பிவிடும் என்று அஞ்சும் ராதாரவி, மகளை திருத்தும் வகையில் உயர்வான ஆசிரியர் படிப்புக்கு செல்ல வழிவகுப்பார்.

பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவரது தோழியின் நிலையை கண்டு ஆத்திரம் அடைகிறார், ராஜலட்சுமி, நேர்மையான காவலராக தந்தை இருந்தும் சட்டத்திற்கு சாட்சியும் சான்றும் இல்லை என்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தண்டிக்க முடியாது. வெளியே சுதந்திரமாக வருவார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டுவார்கள். வாபஸ் வாங்க வைப்பார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மானத்துக்கு பயந்தும், எதிர்கால வாழ்க்கைக்கு பயந்தும் வெளியே சொல்ல முடியாமலும், அவமானத்துக்கு பயந்தும் தற்கொலையும் செய்கிறார்கள் என்று ஆத்திரப்படுகிறார்.
படித்து ஆசிரியராக வேலைக்கு சென்ற பிறகு தனது வாழ்க்கை மட்டும் என்று சுயநலமாக இருக்காமல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக பொங்கி எழுகிறார். மக்களை அணி திரட்டியும்,சட்டம் மூலமும் நியாயம் பெற போராட்டம் நடத்துகிறார். இதனால் அவருக்கு மிரட்டல்கள் வருகிறது.
பாதுகாக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்த்து ஏளனம் செய்கிறது. பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கிறார்.

பள்ளி ஆசிரியர் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிப்பதா? என்று போலீஸ் நிராகரிக்கிறது. இதனால், ராஜலட்சுமி நீதிமன்றத்தை நாடி செல்கிறார். விஷயம் பரப்பாகிறது. நாடே அவரது விசாரணையை உன்னிப்பாக கவனிக்கிறது. பெண் துப்பாக்கி ஏன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் வைக்கும் வாதங்கள்தான் மீதி படம்.
கடவுள் கைகளில் ஆயுதங்கள் இருந்தும், காவல் துறையில் ஆயுதங்கள் இருந்தும்… சிறுமிகள்,பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். குற்றங்களை தடுக்க முடியவில்லை.
பாலியல் வன்முறை நடக்காமல் தடுக்க பெண்ணிடம் துப்பாக்கி இருந்தால் அது பாதுகாப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
பெண்கள் கையில் துப்பாக்கி இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கதையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதை ஆத்திரத்துடன் முன் வைத்து விவாத்திருக்கிறார், இயக்குநர் கணபதி பாலமுருகன், பாடகியாக அறியப்பட்ட ராஜலட்சுமி இந்தப் படத்தில் கதையின் நாயகியாக, பாரதியாகவே,ஆவேசமுள்ள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
குடும்பத்தைவிட பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள் கொடுக்கும் கதாபாத்திரம் அது. இயல்பாகவே அந்தப் கதா பாத்திரம் மீது நமக்கு மரியாதை வருவதால் அவரது நடிப்புடன் அந்தப் கதாபாத்திரத்தின் மீது பெரிய மரியாதை இன்னும் கூடிவிடுகின்றது. வீட்டில் அவருக்கு கிடைக்கும் ஒத்துழைப்பு, வெளியில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினை,காவல் அதிகாரிகளின் மிரட்டல், அவர்களை துணிச்சலாக எதிர்கொள்வது, தோழமையுடன் கண்டிப்பான பேச்சு என அந்தந்த இடத்துக்கான பொருத்தமான நடிப்பை கொடுத்து அந்த பாரதி கதா பாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார் ராஜலட்சுமி.
முதல் படம் என்றே தெரியாத அளவுக்கு பல இடங்களில் அவரது நடிப்பு முத்திரை பளிச்சிடுகிறது.

மேலும் இந்தப் படத்தில் அவருக்கு உறுதுணையாக வரும் வழக்கறிஞராக விஜய் பாரத். அவரது வசனமும், நடிப்பும் படத்துக்கு மிகபெரிய பலம். கதை நாயகியின் பாசமுள்ள அப்பாவாக வந்து நாயகியின் பாத்திரத்திற்கு படம் முழுக்க வலு சேர்ப்பதுடன்,பிளாஷ்பேக் காட்சியில் நெகிழ வைக்கிறார் ராதாரவி, நாயகியின் இளம் வயது தோற்றத்தில் வரும் அபிநட்சத்திரா அன்பான காட்சிகளில் மட்டுமல்ல ஆக்ரோசமான காட்சிகள் மற்றும் அடிதடி காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார். அவருக்கு தோழியாக வரும் தன்யா அனன்யா நெஞ்சை கணக்க செய்யும் வேடத்தில் நடித்து பல இளம் பெண்களின் நினைவுகளை ஞாபகத்திற்கு கண்முன்னே கொண்டு வருகிறார்.
நீதிபதியாக வரும் கீதா கைலாசம், அமைச்சர் வேடத்தில் வரும் பழ கருப்பையா, அரசியல்வாதியாக வரும் நமோ நாராயணா, போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ஜீவா ரவி, கிடைத்த தகவலை விற்கும் போலீஸ்காரர் வையாபுரி, திமிர் பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் ரவி,
துணை போகும் வழக்கறிஞர் ஜீவானந்தம் என பலர் நடித்துள்ளனர். எல்லோருமே கதைக்கு பொருத்தமான தேர்வுதான்.
கதையோடு பயணிக்கும் காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவும், பைஜூ ஜேக்கப் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம். இதில் ‘என் நிழலும் நீ, நிஜமும் நீ பாடல் தியேட்டரை விட்டு வந்த பின்பும் திரும்ப திரும்ப கேட்கிறது.
“துப்பாக்கி என்கிற ஒரு ஜடப்பொருள் உயிருள்ள ஒரு பொண்ண காப்பாத்துன்னா… அத கொடுக்குறதுல என்ன உங்களுக்கு பிரச்சினை” என்கிற
கருத்தை வைத்துக் கொண்டு… அதுக்கான பரபரப்பான திரைக்கதையுடன் படத்தை பார்க்க வைக்கிறார், இயக்குனர் கணபதி பாலமுருகன்.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்கிற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பாலியல் வன்முறைக்கு எதிரான தனது கருத்தை ஆத்திரத்துடன்,புதிய புதுமை பெண் படைப்பாக லைசென்ஸ் படத்தை படைத்திருக்கிறார் இயக்குநர்.
சமூக பொறுப்புள்ள இந்த படைப்பாளியை வரவேற்போம், வாழ்த்துவோம்….
(எஸ். ஏ.ராஜ்குமார்-செய்தியாளர் யுகம் நியூஸ்)
