சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய, மாநில,அரசுகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2 வாரங்களுக்கு முன் 82 ஆக இருந்த உயிர் பலி தற்போது 437 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது நாட்டில் இறப்பு சதவீதம் 3.3 சதவீதமாக உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் கடந்த மாதம் 24ம் தேதி 21 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ம் தேதியுடன் இது முடிந்த பிறகு மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டதன் காரணமாக இந்தியா பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் இந்திய பொருளாதாரம் மட்டுமில்லாது, தனி மனித வாழ்வாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

நாள்தோறும் உணவுக்காக கையேந்தும் நிலைக்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தங்களது உணவுக்கூட கிடைக்கவில்லை என மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் வீதிகளுக்கு வந்து போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசு அறிவித்த நிவாரணம் இதுவரை மக்களுக்கு முழுமையாக சென்றடைந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் வரும் 20-ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு செய்துள்ளது.

இதில் நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி முதல் சுங்கசாவடிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் இருக்கும் அரசு, ஆனால் மக்களிடமிருந்து வரியை வசூல் செய்வதில் மட்டும் குறியாக உள்ளது. தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் சுங்கசாவடிகளில் கட்டணம் வசூலித்தால், அது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கே வழி வகுக்கும்.

ஏனென்றால் ஊரடங்கு உத்தரவு காரணமாக கார்,பஸ்கள் போன்றவை இயக்கப்பட மாட்டாது. சரக்கு வாகனங்கள் மட்டுமே இயங்கும், அப்படி இயங்கும் போது சுங்ககட்டணம் வசூலிப்பது எப்படி சாத்தியமாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை நாடு முழுவதும் 461 சுங்க சாவடிகளை அமைத்து காண்ட்ராக்டர்கள் மூலம் நிர்வகித்து வருகிறது. இதில் 42 சுங்க சாவடிகள் தமிழகத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பது உண்மை.

ஆனால் ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில் பணத்தை விட மக்களின் உயிர் முக்கியம் என பேசியிருந்தார், தற்போது அனைத்து தொழிற் நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டு வருவாய் இன்றி பெரும் இன்னலை சந்தித்து வருகின்றன.

அப்படியிருக்கும் போது பணத்தை குறித்து சுங்ககட்டணம் வசூலிப்பதை மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி கொண்டு, அடுத்த 2 மாதங்களுக்கு சுங்ககட்டணத்தை வசூலிக்க கூடாது என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.