தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச் சங்கத்தின் சார்பில் அனைத்து டெக்னீசியன்களையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம்!
எழும்பூர்:தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச் சங்கத்தின் சார்பில் அனைத்து டெக்னீசியன்களையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் அவர்கள் தலைமையில் எழும்பூர் இராசரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.மாநில பொதுச்செயலாளர் பூ. புரூஸ்லி முன்னிலை வகித்தார்.இக்கூட்டமைப்பின் தலைவர் பி .காளிதாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சமூக சமத்தவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி. ஆர். ரவீந்திரநாத் கண்டன உரையாற்றினார்.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு டயாலிசிஸ் டெக்னீசியன் பயிற்சி பெற்றவர்கள் , கடந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (MRB) மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டனர்.
292 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 360 நுட்புநர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 160 நுட்புநர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது .மீதமுள்ள 132 நுட்புநர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது.இப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

தற்போது பணியில் உள்ள 160 டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கு ஓராண்டு பணி இன்றுடன் நிறைவு பெறுவதால், அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதோடு, பணி நிரந்தரமும் வழங்கிட வேண்டும். MRB மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களை மீண்டும் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், வெளி கொணர்தல் முறையில் ( Out Soursing) குறைவான ஊதியத்தில் பணிநியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்முடிவை கைவிட்டுநிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும்.1996 க்குப் பிறகு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்படவில்லை என்பது வேதனையோடு குறிப்பிடத்தக்கது.

இன்று வரை பணிபுரிந்த 160 நுட்புநர்களுக்கான ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது .ஒரு சில மருத்துவமனைகளில் இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஊதியம் வழங்காமல், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் வருவாய் மூலம் ஒரு சில மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஊதியக் கிடைக்காமல் சிரமப்படும் இவர்களுக்கு உடனடியாக ஊதிய பாக்கியை வழங்கிட வேண்டும்.
மூன்று டயாலிசிஸ் படுக்கைகளுக்கு ஒரு டயாலிசிஸ் டெக்னீசியன் இருக்க வேண்டும் என, ஒன்றிய அரசு வழிகாட்டியுள்ளது. அதன் அடிப்படையில், மேலும் புதிதாக 500 டயாலிசிஸ் டெக்னீசியன்கள் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
.
