பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கரூர் மாவட்டத்தில் 29/09/2022 அன்று நடைபெற்ற பள்ளி கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்களாக பணி புரியும் உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு மேல் பணி புரிந்தமைக்கான கட்டாயப் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு இன்று தமிழக முழுவதும் கல்வித்துறை அமைச்சு பணியாளர்களுக்கு நடைபெறுவதாக அறிவித்து அதன் ஒரு பகுதியாக கரூர், முதன்மை கல்வி அலுவலகத்தில் 29/09/2022 அன்று நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு பல்வேறு முரண்பாடுகளுடன் நடத்துவதாக அறியப்பட்டதை அடுத்து தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கரூர் மாவட்ட மையம் உடனடியாக தலையிட்டு எந்த ஒரு ஊழியருக்கும் எவ்வித பிரச்சனையும் இன்றி இந்த கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், உதவியாளர் பதவியில் முன் தேதியிட்டு பணி வரன்முறை செய்த பணியாளர்களுக்கு முன் தேதியிட்டு பணி வரன்முறை செய்த தேதியையே அடிப்படையாகக் கொண்டு முந்துரிமை பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் நிர்வாக சீரமைப்பு காரணமாக பல்வேறு நிலையில் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு பணி நிலைக்கும் விருப்பமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு, மீதமுள்ள உபரி பணியிடங்களை கண்டறியும் நிலையில் உபரியாக கண்டறியப்படும் பணியிடங்களை பணியில் இளையோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இன்று முதன்மை கல்வி அலுவலகத்திற்கு முன்பாக காத்திருப்பு போராட்டம் மிக எழுச்சியோடு நடைபெற்றது.

முறையாக அனைவருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காமல் ஊழியர்களுக்கு நியாயமான முறையில் கலந்தாய்வு
நடைமுறைப் படுத்தப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டு உபரியாக உள்ள பணியிடங்களை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து இன்று நடைபெற்ற கலந்தாய்வில் பல்வேறு முரண்பாடுகளோடு கலந்தாய்வு நடத்தப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாறுதல் கலந்தாய்வு மற்றும் அனைத்து வகையான கலந்தாய்வுகளை புறக்கணிப்பது என்று காத்திருப்பு போராட்டத்தை நடத்தியது ‌ இந்தப் போராட்டம் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.

இதனை அடுத்து மாநில தலைவர் தோழர் சேகர் மற்றும் மாநில பொருளாளர் தோழர். வினோத் குமார் ஆகியோர் பள்ளிக்கல்வி இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களிடம் அலைபேசியிலும், நேரிலும் தொடர்பு கொண்டு போராட்டத்தை முடிவு கொண்டு வர பேசப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்கள் மாநில பொதுச் செயலாளர் தோழர் பொன். ஜெயராம் அவர்களிடம் அலைபேசியில் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாக கரூர் மாவட்ட கல்வித்துறை ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி கலந்தாய்வு நடத்தப்பட்டு நேற்று இரவு 9. 15 மணிக்கு கலந்தாய்வு நிறைவு பெற்றது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கலந்தாய்வு கரூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கும், கல்வித்துறை மாவட்ட அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட, வட்டக் கிளை பொறுப்பாளர்களுக்கும் முன்னணி ஊழியர்களுக்கும், மாநிலத் தலைவர் தோழர்.அ. சேகர் மாநில பொருளாளர் தோழர். நா.வினோத் குமார் ஆகியோருக்கும், சிறப்பாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய பள்ளிக்கல்வி என இயக்குனர் (பணியாளர் தொகுதி) மற்றும் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கும், பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர் நண்பர்களுக்கும், காவல்துறை உளவு பிரிவு நண்பர்களுக்கும், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். கல்வித்துறை ஊழியர்களின் உருக்கு போன்ற ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமாக இன்றைய தினம் நடைபெற்ற போராட்டம் எதிரொலித்திருக்கிறது.

நமது ஒற்றுமையின் விளைவாக இன்றைய தினம் நடைபெற்ற கலந்தாய்வில் பல ஊழியர்கள் மிக்க மகிழ்ச்சியோடு தமக்கு உரிய இடத்தை தேர்வு செய்து உள்ளனர் என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதோடு இது போன்ற போராட்டங்களை தொடர்ச்சியாக நாம் நடத்தி கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை ஒரு போராட்ட வீரர்களாக/ வீராங்கனையாக தயார் படுத்தக் கூடிய வல்லமை தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்திற்கு உள்ளது என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் இன்றைய போராட்டம் அமைந்தது. இன்றைய போராட்டத்தில் காலை முதல் முழுமையாக கலந்து கொண்டு நமக்கு முழு ஆதரவை அளித்ததோடு மட்டுமல்லாமல் போராட்டத்தை வாழ்த்தி, வாழ்த்துரை வழங்கி நம்மோடு போராட்டம் முடியும் வரை நமக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட மையத்தின் மாவட்டத் தலைவர் தோழர்.மு. சுப்ரமணியன் மாவட்ட செயலாளர் தோழர் கெ சக்திவேல் மாவட்ட இணை செயலாளர் தோழர்.அறிவழகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், வட்டக் கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.