சென்னை : டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரப்பப்படுவதைப் போல் தமிழக அரசு ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.யாருடைய கையெழுத்தும் இல்லாமல் இந்தச் செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கு எதைச் சொல்ல வருகின்றது ? மனிதர்கள் மூலம் பரவும் கொள்ளை நோய் மதத்தைக் கொண்டு பரவுகின்றது என்ற சிந்தனையை அரசே மக்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றது.

எந்த அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் அதை நாங்கள் செய்யவில்லை என்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் நிரூபித்தே ஆகவேண்டும் என்ற எழுதப்படாத விதி இங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதைத்தான் இந்த கொள்ளை நோய் பரவலிலும் பாசிஸ்டுகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.தமிழக அரசும் தற்போது அதைத்தான் செய்துள்ளது.எனவே தமிழக அரசு முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கடந்த பிப்.21ம் தேதி கோவையில் ஈஷா யோக மையம் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பல்லாயிரக்கான வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள இந்து ஆன்மீக மடாதிபதிகளை கடந்த மாதங்களில் ஏராளமான வெளிநாட்டவர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோணா பரிசோதனை மேற்கொள்ளபட்டதா, இல்லை அரசு இதனை வெளியில் சொல்ல மறைக்கிறதா எனும் ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.
சுனாமி,வெள்ளம்,புயல்,நிலநடுக்கம் என எந்த பேரிடர்கள் வந்தாலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் சேவை ஆற்றக்கூடிய சமூகம் இஸ்லாமிய சமூகம். தற்போதைய சூழலிலும் அதைத்தான் நாங்கள் செய்து கொண்டுள்ளோம்.

இதுதான் எங்களின் இயல்பு.இந்த சமூகத்தின் மீது எத்தனை அவதூறு அம்புகளை நீங்கள் எரிந்தாலும்.சத்தியம் வென்றே தீரும்.அசாத்தியம் ஒரு நாள் எங்கள் கைகளால் அழிந்தே தீரும். இஸ்லாமிய சமூகத்தை குறிப்பிட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு அவதூறு பரப்பும் தமிழக அரசின் செயலை தமிழ்நாடு முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிப்பதோடு, இந்த செய்தி குறிப்பை திரும்ப பெற வேண்டுமென வி.எம்.எஸ்.முஸ்தபா கேட்டுக் கொண்டார்.

மேலும் எத்தனை அவதூறுகளை எவர் பரப்பினாலும் அதை எல்லாம் புறம் தள்ளி விட்டு இந்து, கிறிஸ்துவ உட்பட அனைத்து சமுதாய சகோதரர்களுக்கு மக்கள் சேவையை தொடர்வோம் என தெரிவித்து கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.