வடபழனி :
அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் வடபழனியில் நடைப்பெற்றது.
இதில் பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
எம்.ஜி.ஆர் அவர்களின் விசுவாசியும்,சந்திரலேகா,நிலா உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், அம்மா பேரவையின் மாநிலத் துணைச் செயலாளராக இருந்தவருமான எம்.ஜி.ஆர் நம்பி என்பவர் அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியை சில மாதங்களில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல் சமயத்தில் துவங்கியுள்ளார்.
இக்கட்சியின் அறிமுக விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில் இந்த விழாவில் நான் கலந்து கொண்டதற்கும், நடிகர் விஜய்க்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும், எம்.ஜி.ஆர்.நம்பி எனது நீண்ட நாள் நண்பர் என்கின்ற பட்சத்தில் மட்டுமே தான் இவ்விழாவில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் கொள்கைகள் மற்றும் இதுவரை யாருமே செய்திராத பல நலத்திட்டங்கள் அடங்கிய தமிழக வளர்ச்சி ஆவண உத்தரவாதம் அடங்கிப புத்தககத்தை இக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஜி.ஆர் நம்பி அவர்கள் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதில் ரேசன் பொருட்களுக்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1500 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்,
இளைஞர்களுக்கான யூத் பேங்க் ஆஃப் இந்தியா என்ற திட்டம் அனைவரின் வரவேற்பை பெறும் வகையில் அமைந்துள்ளது. இதன்படி 18 வயது முதல் 38 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ரூ.1 முதல் ரூ.5000 கோடி வரை தொழில் செய்ய கடனாக பெறலாம். இதற்கு நல்ல திட்டமும் யோசனை மட்டும் போதும் என கூறப்பட்டுள்ளது.
அரசியல் கூட்டணி குறித்து பேசுகையில், எங்கள் கொள்கை மற்றும் திட்டங்களை ஆதரிக்கும் கட்சியுடன் கூட்டணிக்கு தயார் எனவும், தனித்தே தேர்தலை சந்திக்கவும் தயார் எனவும் கூறினார்.
