ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த பள்ளிவாசல்களை திறக்க அனுமதிக்க வேண்டும் – முதல்வருக்கு இடிமுரசு இஸ்மாயில் வேண்டுகோள்

சென்னை : மே, 20

தமிழகத்தில் உள்ள மக்கள் நோய் நொடி இல்லாமல் சுகமாக வாழ வேண்டும் நீண்ட காலம் நலமாக வாழ வேண்டும் என்று 24 மணி நேரமும் ஒய்வில்லாமல் உழைத்து பணியாற்றி இந்தியாவிலேயே தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்தி உயிரிழப்பை குறைத்த மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை பாராட்டுகிறேன்.

கடந்த 60 நாட்களுக்கு மேலாக கடைபிடித்து வரும் ஊரடங்கால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பட்டினியால் பாதிக்கப்படக் கூடாது என்று தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஆயிரமும், அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு ஆகியவற்றை வழங்கி உதவிய தாங்கள் மக்கள் நலனுக்காக ஊரடங்கை படிப்படியாக குறைத்து இன்று பஸ் போக்குவரத்தையும் அனுமதித்துள்ளதை மக்கள் பாராட்டுகிறார்கள்.

மக்களின் மன அழுத்தம் மறைந்திடும் வகையில் நம்மை படைத்து பரிபாலித்திடும் எல்லாம் வல்ல இறைவனை வணங்க ஜூன் 1ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கோயில்களை திறக்க ஆணையிட்டதை வரவேற்கிறேன்.

அது போலவே தமிழகத்தில் உள்ள இந்து பெருங்குடி மக்களுக்கு அடுத்து பெரும்பான்மை சமுதாயமாக உள்ள இஸ்லாமிய சமூகம் தங்களது மத நம்பிக்கைகளை கடைபிடித்து வாழ்வதர்க்கு யாராலும் எந்த இடையூறும் ஏற்படாமல் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து பாதுகாத்து வரும் தாங்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கொரோனா ஊரடங்கு வேளையில் ரமலான் நோன்பு முடிந்து படைத்த இறைவனாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்ற நோன்பு பெருநாளாம் ஈதுல் பித்ர் என்ற ரமலான் பண்டிகை தொழுகையை நிறைவேற்ற தமிழகத்தில் உள்ள 20 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் இடிமுரசு இஸ்மாயில் அவர்கள் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.