சென்னை :உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றை கட்டுபடுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு, தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று இருக்கிறதா என கண்டறிய தமிழகம் முழுவதும் 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 19 இடங்களில் கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளது. இந்த பரிசோதனை மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 700 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.

இதனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு கால தாமதமாகிறது. இதனால் நோய் தொற்றுள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆகிறது. எனவே, கொரோனா நோய் தொற்றுள்ளவர்களை 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்டை சீனாவிடம் இருந்து வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. தற்போது அவசர தேவை என்பதால் டெண்டர் விட்டு வாங்க காலதாமதம் ஆகும் என்பதால், அவசர பணிக்கு எனக்கூறி சீனாவிடம் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 50 ஆயிரம் கிட் தமிழகம் வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த கருவிகளை மத்திய அரசே எடுத்துக் கொண்டது. அவற்றை எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிரித்து கொடுக்கும் என மாநில அரசுகள் நம்பி வந்தன. ஆனால் இந்தியாவிற்கு வரவேண்டிய ரேபிட் கிப் தற்போது அமெரிக்காவிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.

இந்தியாவிற்கு வர வேண்டிய ரேபிட் கருவி அமெரிக்காவிற்கு சென்றது எப்படி? ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா தரவில்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு மத்திய அரசு அடிபணிய வேண்ட கூடாது என பல்வேறு கட்சிகள் வலியுறுத்திய போதிலும், இதனை ஏற்று கொள்ளாமல் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவுக்கு மத்திய அரசு வழங்கியதன் காரணமாக தற்போது ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்கு நாட்டில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போன்று முககவசம், சானிடேசர் உள்ளிட்ட பல வகையான மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியுள்ளன.

அனைத்து மருத்துவ பொருட்களும் தேவையான அளவு கையிருப்பு இருப்பதாக அரசுகள் கூறி வந்தாலும், உண்மையில் தட்டுபாடு நிலவுகிறது. இந்த விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணாக அரசு அதிகாரிகளும் கூறி வருவதால் மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகவே கொரோனா கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் கையிருப்பு, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.