சென்னை, மே.17,
கொரோனா தொடர் ஊரடங்கு பாதிப்பால் நிலைக்குலைந்து போயிருக்கும் சில்லறை வணிகத்தின் தற்போதைய குறித்தும், மத்திய அரசின் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை ஊக்குவிக்கும் அறிவிப்பு குறித்தும் செய்தியாளர் சந்திப்பு பெரம்பூரில் நடைப்பெற்றது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அண்ணல் காந்திஜி ஆங்கிலேயருக்கு எதிரான மத்திய சுதேசி ஆயுதம் தான் இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பதற்கான ஒரே வழி என்பதை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகாவது பாரதிய ஜனதா அரசு புரிந்து கொண்டிருப்பதற்காக தமிழ்தாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

மேலும் இதை கொரோனாவால் ஏற்பட்டிருக்கிற ஒரே நல்ல விளைவு என்று எங்கள் பேரவை கருதுகிறது.25 ஆண்டுகளாக சுதேசிப் பொருட்களையே வாங்க வேண்டுமென்றும், உள்நாட்டுத் தயாரிப்புக்களை ஊக்குவிக்க வேண்டுமென்றும் , தமிழக மக்களிடம் எங்கள் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது . இதற்காக விழிப்புணர்வுப் பயணங்கள், சுதேசிப் பிரச்சாரம், மாணவர் விழிப்புணர்வுப் போட்டிகள் என்று பல்வேறு நடவடிக்கைகளில் எங்கள் பேரவை பாடுபட்டது .
கோக் – பெப்சி போன்ற அந்திய குளிர்பானங்களின் நச்சுத் தன்மை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதிலிருந்தே அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக வணிகர்கள் வலியுருத்தினோம் .
சுதேசித் தயாரிப்புகளுக்கு முன்னுரிமையும், சலுகைகளும் வழங்க வேண்டும் என்று ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் வைத்தோம் . முன்பிருந்த ஆட்சியிலும் சரி , இப்போதுள்ள ஆட்சியிலும் சரி , எங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு எவரும் செவி மடுக்கவில்லை .
பாரதீய ஜனதா ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சரிவுப் பாதையில் போய்க் கொண்டிருப்பதற்கு , அந்நியப்பொருட்கள் குவிப்பே பெரும் காரணம் என்பதையும், ஆன்லைன் வணிகம் என்கிற அதர்ம வணிகத்தின் மூலம் , அந்நிய நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், கடந்த 6 ஆண்டுகளாகச் சுட்டிக் காட்டி வந்தோம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை , சுதேசிப் பொருளாதாரத்தையும், உள்நாட்டு உற்பத்தியையும் கடுமையாக பாதித்திருப்பதையும் கண்டித்தோம். மத்திய அரசு வணிகர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தவேயில்லை . இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரத்தின் சிறப்பை ஒட்டுமொத்த உலகும் இப்போது புரிந்து கொண்டு விட்டதாக , பிரதமர் நரேந்திர மோடி சொல்வது வியப்பளிக்கிறது .
அண்ணல் காந்திஜி வலியுறுத்திய தற்சார்புப் பொருளாதாரத்தின் சிறப்பை,மோடியின் அரசாங்கம் இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை ! அதற்காக , கொரோனாவுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
