வட கிழக்கு ஆயுர்வேதம் & ஹோமியோபதி நிலையத்தின் (என்இஐஏஹெச்)
ஆறு புதிய கட்டிடங்களைத் திட்டம் II இன் கீழ் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்
திறந்து வைத்தார்
ரூ 60.16 கோடிகள் மதிப்பீட்டில் என்இஐஏஹெச் திட்டம் II திறன் விரிவாக்கம் : மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்
1 ஆண்கள் விடுதி, 1 பெண்கள் விடுதி, வகை III, வகை IVஏ, வகைIVபி, முதுநிலை உறைவிட விடுதி மற்றும் விருந்தினர் இல்லம் ஆகியவையும் இன்று திறந்து வைக்கப்பட்டன
சென்னை : மத்திய துறைமுகம், கப்பல் & நீர்வழி மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இன்று வட கிழக்கு ஆயுர்வேதம் & ஹோமியோபதி நிலையத்தின் (என்இஐஏஹெச்) ஆறு புதிய கட்டிடங்களைத் திட்டம் II திறன் விரிவாக்கத்தின் கீழ் திறந்து வைத்தார். இப்புதிய கட்டுமாங்களின் திட்ட மதிப்பீடு ரூ 60 கோடிகளுக்கும் அதிகமாகும்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய துறைமுகம், கப்பல் & நீர்வழி மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசுகையில் ‘இன்று ஷில்லாங்கில் ஆறு புதிய கட்டிடங்களைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பிராந்தியத்தில் பாரம்பரிய மருத்துவத்தை இன்னும் மேம்படுத்த முக்கியப் பங்களிப்பதன் மூலம் முன்னணி மருத்துவ நிலையத்தின் திறன் விரிவடையும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தலைமையின் கீழ் நவீன மருத்துவத்துடன் இணைந்து பாரம்பரிய மருத்துவத்தையும் சான்று அடிப்படையிலான ஆய்வாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு தீர்வுகள் வழங்கு கட்டமைப்பில் ஒருங்கிணைந்த மருத்துவத்தின் பங்கு வரும் ஆண்டுகளில் பெருமளவு இருக்குமென நம்புகிறோம். மேலும், இப்புதிய கட்டிடங்கள் மூலம் அரசு செய்த முதலீடுகள் நாட்டின் இந்தப் பிராந்தியத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்குப் புத்துணர்வூட்டும் எங்கள் முனைவுகளுக்கு ஊக்கமும் அளிக்கும். விரைவில், என்இஐஏஹெச் தனது ஆம்புலன்ஸ் சேவைகளைத் துவக்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
104 நபர்கள் தங்கும் வசதி கொண்ட ஆண்கள் விடுதி, 104 நபர்கள் தங்கும் வசதி கொண்ட பெண்கள் விடுதி, வகை III குடியிருப்பு 8 அலகுகள், வகை IVஏ குடியிருப்பு 6 அலகுகள், வகை IVபி & இயக்குனர் குடியிருப்பு 7 அலகுகள், 25 அலகுகள் முதுநிலை உள்ளுறை விடுதி, 19 அறைகள் & 2 சூட்கள் கொண்ட விருந்தினர் இல்லம் ஆகியவற்றை உள்ளடக்கி ஆறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பீடு சுமார் ரூ 60.16 கோடிகள்.
பாரம்பரிய மருத்துவத்தில் வட கிழக்கின் பங்களிப்பு குறித்து சர்பானந்தா சோனோவால் தொடர்கையில் ‘அன்னை பூமியின் அருளாசி பெற்ற எங்கள் வடகிழக்குப் பிராந்தியத்தின் இயற்கை எழில் பல தலைமுறைகளாக எங்களைக் குணப்படுத்தி வருகிறது. இந்த மருத்துவ முறையை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இன்னும் பல மக்கள் தரமான மற்றும் மேம்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமென விரும்புகிறோம். பிரதமர் மோடிஜியின் தொலைநோக்குச் சிந்தனை அனைவருக்குமான சிறப்பான மற்றும் திறமையான மருத்துவப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்பதே. ஆய்வுத் திறனை அதிகரிக்கவும், விரிவுபடுத்தவும், பாரம்பரிய மருத்துவத்துக்கான அறிவியல் அடிப்படையை உருவாக்கவும், மேற்கொண்டு வரும் தொடர் உத்வேகம் காரணமாக, இன்றைக்குத் என்இஐஏஹெச் அமைப்புக்காகத் திறக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் இந்த நோக்கத்தை நிறைவு செய்ய முக்கியப் பங்களிக்கும்’ என்றார்
மருத்துவமனைச் சேவைகள் சிறப்பான அனுபவத்தைத் தருவதைத் தொடர்ந்து என்இஐஏஹெச் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022-23இல் சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள் எண்ணிக்கை 52,088. உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 504. ஆயுர்வேத புறநோயாளிகள் 36,683, உள்நோயாளிகள் 482 ஆகும். ஹோமியோபதி புறநோயாளிகள் 19,397, உள்நோயாளிகள் 22 ஆகும். இதே காலகட்டத்தில் என்இஐஏஹெச் 35 சுகாதார முகாம்களையும், 4 சிஎம்இ-க்களையும் (தொடர் மருத்துவக் கல்வி) நடத்தி உள்ளது.
நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக மேகாலயா அரசு சுகாதாரம் & குடும்ப நல அமைச்சர் டாக்டர் மஜேல் அம்பரீன் லிங்க்டோ, மேகாலயா அரசு கால்நடை பராமரிப்பு & கால்நடை மருத்துவ அமைச்சர் அல் ஹெக், வட கிழக்கு மலைப்பகுதி பல்கலைக்கழகத் (ஏன்இஹெச்யூ) துணை வேந்தர் பேராசிரியர் பிரபா சங்கர் சுக்லா, வட கிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதாரம் & மருத்துவ அறிவியல் நிலையம் (என்இஐஜிஆர்ஐஹெச்எம்எஸ்) இயக்குனர் நளின் மேத்தா, என்இஐஏஹெச் இயக்குனர் டாக்டர் நீடா மகாசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கல்வித் துறையில் என்இஐஏஹெச் ஏற்கனவே ஆயுர்வேத மருத்துவம் & அறுவை சிகிச்சை இளநிலை பட்டப் படிப்பிற்காக (பிஏஎம்எஸ்) மற்றும் ஹோமியோபதி மருத்துவம் & அறுவை சிகிச்சை இளநிலை பட்டப் படிப்பிற்காக (பிஹெச்எம்எஸ்) 6 தொகுதி மாணவர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளது. 2016-17இல் சேர்த்த 50 மாணவர்களுடன் ஒப்பிடுகையில் தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் 63 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேகாலயா, ஷில்லாங்க், வட கிழக்கு மலைப்பகுதி பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பட்டப் படிப்புகளாகும்.
வடகிழக்கு பிராந்தியம், சிக்கிம் மக்களுக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்காக நிறுவப்பட்ட வட கிழக்கு ஆயுர்வேதம் & ஹோமியோபதி நிலையம் (என்இஐஏஹெச்), இந்திய அரசு, ஆயுஷ் அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற நிலையமாகும். மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டு ஓர் ஆயுர்வேதம் மற்றும் ஓர் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி தற்போது இயங்கி வருகின்றன. உள்நோயாளிகளுக்காக ஆயுர்வேதப் பிரிவில் 60 படுக்கைகள் மற்றும் ஹோமியோபதி பிரிவில் 20 படுக்கைகள் உள்ளன.
