சென்னை :தொடர் மழையால் ஏற்படக்கூடிய பல்வேறு காய்ச்சலிருந்து மக்களை பாதுகாக்க வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குக : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
வடகிழக்கு பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பது கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தற்போது மேலும் தீவிரம் அடைந்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 29-ம் தேதி அதிகப்படியான மழை பெய்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை தண்ணீர் வழங்கக்கூடிய ஏரிகள் நிரம்பி, அதில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீர் இல்லாமல் சென்னையின் பல பகுதிகளில் மக்கள் தவித்து வருகின்றனர். மழைகால நிவாரண முகாம்களை முன்கூட்டியே அமைத்திருந்தால் பொதுமக்களின் இந்த சிரமத்தை தமிழ்நாடு அரசு தவிர்த்து இருக்க முடியும்.
ஆனால், தி.மு.க. அரசு மெத்தனமாக இருந்துவிட்டதன் காரணமே, மழையால் மக்கள் இந்த அளவிற்கு இன்னல் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியும் தாமதப்படுத்தாமல் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு, மக்களின் இன்னலை போக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல, மழை நீரால் ஏற்பட்டக்கூடிய நோய்தொற்றில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, அதிகப்படியான மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு சுகாதாரத்துறையை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, காய்ச்சல்களில் இருந்து மக்களை முன்னெச்சரிக்கையாக காக்கும் வகையில், வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் மேற்கொள்ளும் பணிகளை மழை பெய்யும் மாவட்டங்களில் மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
