பெரியமேடு :தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை பெரியமேட்டிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ,இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் , எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்,நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு 150 வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நண்பன் அறக்கட்டளை சார்பில் 150 விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் , சீருடைகள் வழங்கப்பட்டன .
இந்த நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக சுபானு என்பவரின் யோகா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நீச்சல் வீரரான குற்றாலீசுவரன் அவர்கள் நண்பன் அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு 14 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவருக்கு தலா 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசுகையில்,
அம்மா வழியில் எனக்கு சொந்த ஊர் சீர்காழி , சீர்காழியை சேர்ந்த மாணவி இங்கு யோகா செய்தார். அதை பார்க்கும்போது எனக்கும் யோகா மீது ஆர்வம் வருகிறது.
இந்த ஆண்டு 11 பேர் தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற நிலையில் அடுத்த முறை மேலும் அதிக வீரர்களை அனுப்ப வேண்டும்.
குற்றாலீசுவரனை எனக்கு சிறு வயது முதலே தெரியும் , எனது சகோதரியுடன் ஒரே வகுப்பில் படித்தவர் அவர்.
தமிழக முதலமைச்சர் எப்போதும் ஃபிட்னசுக்கு முக்கியத்துவம் தருபவர். தினம்தோறும் காலை 6 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி கூடத்திற்கோ , சைக்கிளிங்கோ செய்வார். நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் , அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மூவரும் எனக்கு இன்ஸ்பிரேசன் என்றும் கூறினார்.

மேலும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேடையில் யோகா செய்து அசத்திய சுபானு என்பவரின் கல்விச் செலவை தாமே ஏற்றுக் கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிகளில் கலந்து கொண்டு 8 தங்கப் பதக்கங்களை வென்றவர் சுபானு என்பது குறிப்பிடத்தக்கது.

