மனசு தொண்டு நிறுவனம் சார்பில் “ஆதரவற்ற முதியோர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்கிற தலைப்பில் “கதை சொல்லு பாட்டி….” என்னும் விழிப்புணர்வு நிகழ்வு!
நீலாங்கரை:
மனசு தொண்டு நிறுவனம் மற்றும் பாட்ரீஷியன் கல்லூரி சமூக பணி துறை மாணவர்கள் இணைந்து “ஆதரவற்ற முதியோர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் “கதை சொல்லு பாட்டி….” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை நீலாங்கரை கடற்கரையில் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதாட்டிகள், சமூக பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மூதாட்டிகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு விழிப்புணர்வு வசனங்கள் முழங்கப்பட்டது. மேலும் மூதாட்டிகள் குழுவாக இணைந்து விழிப்புணர்வு மணல் சிற்பங்களை உருவாக்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் DSSS தலைவர் மருத்துவர். அடோள்ப் ரிஜோ அவர்கள் தலைமை தாங்கினார். முதியோர்களை ஆதரவற்ற நிலையில் தள்ளுவதால் இன்றைய வளரும் தலைமுறை பேரக்குழந்தைகள் மாடி வீடுகளில் தனிமையில் அனாதைகளாக்கப்படுகின்றனர். காலப்போக்கில் சரியான பராமரிப்பும், பெற்றோர் ஆதரவும் கிடைக்காத இந்த குழந்தைகள் வழி தவறி போதை பழக்கங்களுக்கு அடிமையாகும் சூழல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஆதரவற்றோர் இல்லங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது தமிழர் பண்பாட்டின் பெரும் அபத்தமான போக்கு. நிலா சோறு ஊட்டிய தாயை கோவில் கட்டி பார்க்காமல் ஹோமுக்கு அனுப்புவது நியாயமா..? என பொது மக்களிடம் விழிப்புணர்வு செய்திகளை வழங்கினார்.
சிகா தொண்டு நிறுவன இயக்குநர் மருத்துவர். வள்ளி அவர்கள் மக்களிடம் யூஸ் அண்ட் த்றோ பழக்கம் அதிகரித்து விட்டது.எனவே பெற்றோரை நன்றாக பயன்படுத்தி விட்டு அவர்களுக்கு வயதாகும் காலத்தில் சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர். ஆயிரம் தான் காப்பகங்கள் இருந்தாலும் வயதான காலத்தில் அவர்கள் விரும்புவது உறவுகளின் அரவணைப்பை. இதை உணராத சமூகத்தை என்ன செய்யலாம்…? என பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்திகளை வழங்கினார்.

மேலும் போதையில்லா சமூகத்தை உருவாக்கினால் மட்டுமே ஆதரவற்றோர் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும்.இன்று போதைப் பொருளை பயன்படுத்தும் பல லட்சம் குடும்ப தலைவர்கள், ஆண்களின் உழைக்கும் சக்தி முடமாக்கப்பட்டு பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கின்றன. எனவே மாற்றத்தை எதிர்நோக்கும் இளைஞர்களே போதையை விட்டு வெளியே வாருங்கள் மாற்றம் உங்களுக்கு துணைநிற்கும் என மனசு தொண்டு நிறுவன இயக்குநர் மெர்லின் சிங் அவர்கள் விழிப்புணர்வு செய்தியை பொதுமக்களுக்கு வழங்கினார்.

கடந்த ஆண்டு அதிகமாக சாலையோரம் இருந்த ஆதரவற்ற முதியோரை மீட்டெடுத்து காப்பகத்தில் சேர்த்த பிரகாஷ், கோபாலகிருஷ்ணன், காளிதாஸ் என மூன்று சமூக பணியாளர்களுக்கு “நம்பிக்கை தூண்கள் 2024 விருது” மனசு தொண்டு நிறுவன செயலாளர் சுகன்யா அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நீலாங்கரை காவல்நிலைய அதிகாரிகள் ஒளியேற்ற, அனைத்து மூதாட்டிகளும் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு விழிப்புணர்வு வசனங்களை முழங்கினார். சமூக ஆர்வலர் கார்த்திக் (ஜெயா டிவி கலைஞர்) மற்றும் பல குரல் கலைஞர் ஆனந்த் அவர்களால் மேஜிக் ஷோ, பல குரல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஒரு சில மூதாட்டிகள் தங்களின் பழங்கால கதைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். மூதாட்டிகளின் ஆட்டம் பாட்டத்தை தொடர்ந்து கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பங்களை கட்டி பாட்டிகள் தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். பாட்ரீஷியன் கலை கல்லூரி, சமூக பணி துறை மாணவர்கள் சேஷாத்திரி, அருண் பிரான்ஸில் மற்றும் மனசு தொண்டு நிறுவன திட்ட இயக்குநர் பாரதி சீனிவாசன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
மனசு தொண்டு நிறுவன இயக்குநர் மற்றும் சமூக பணியாளர் மா.மெர்லின் சிங் கூறுகையில், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்னையில் எல்லா இடங்களிலும் நடத்தப்பட வேண்டும். ஆதரவறோர் இல்லங்கள் அதிகரிப்பது ஒரு சாபக்கேடு.
எனவே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக நமது உறவுகளுக்கு நாமே ஆதரவு அளிக்கும் போக்கை இளைய சமூகத்திடம் தொடர்ந்து விதைப்போம் என கூறினார்.
