சென்னை:தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மற்றும் பா.ஜ.கவினர் மீதும் சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வரும் வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைதி பூங்காவான தமிழகத்தில் இதுபோல நடக்கும் வன்முறை எந்த மதத்தினரானாலும், எந்த கட்சிகளாலும், நடந்தாலும் இதை இந்திய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயலை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தார்
மேலும் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்ததாவது:”யாதும் ஊரே,
யாவரும் கேளிர்” ,என்ற உயர்ந்த கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு உரக்கச்சொல்லிய தமிழினம்,வந்தாரை வாழவைக்கும் தமிழினம்,என்ற பெருமைகளுக்குரிய மாநிலமாகிய தமிழகத்தில் கடந்த சில நாட்களாய் காதில் விழும் செய்திகள் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. மாற்றுக்கட்சியினரின் மாற்றுக்கருத்துக்களை,செயல்பாடுகளை சகித்துக்கொள்ளமுடியாமல் வன்முறையை கையில் எடுத்துக்கொண்டு கையெறி குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகளையும் வீசி நாசகாரச் செயல்களை செய்வது அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்திற்குப் பெருமைதரும் செயலாகுமா?
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற வாசகத்தால் தமிழனின் சகிப்புத்தன்மையை உலகிற்கு உணர்த்திய பேரறிஞர் அண்ணா வாழ்ந்த தமிழ் மண்ணிற்கு இது பெருமையாகுமா? உலகின் அதி சிறந்த மக்களாட்சி முறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நம் நாட்டிற்கு இச்செயல்பாடுகள் தலைகுனிவைத் தராதா?
பெருமை மிகு தமிழகமே!
மாற்றுக்கருத்துக்களை எவர் கூறினாலும் அதற்கு உரிய காலத்தில், உரிய வகையில் , ஜனநாயக முறையில் தீர்ப்பளிப்பது தானே நம் கடமை. அதை விடுத்து வன்முறையை கையில் எடுத்து நம்மவர்களை நாமே நம் கைகளால் கொல்வது சரியா?
எனது அன்புத் தமிழகமே வன்முறையை விடுத்து அன்பு வழியில் திரும்புவோம்.
அமைதிகாப்போம். அமைதிப்பூங்காவாக தமிழகத்தை மீண்டும் உருவாக்குவோம் என்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
