தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத்தலைவர் மற்றும்
உறுப்பினர்களிடமிருந்து கருத்துக்
கேட்பு கோரிக்கை!

மதுரை: நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு
தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஜனநாயக ரீதியாக மக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்பதற்காக குழு அமைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கல்வியாளராகிய எனது சார்பாகவும், கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகவும் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் கீழ்க்காணும் கோரிக்கைகள், கருத்துக்கள் ஆலோசனைகளை தாங்கள் கூட்டணி வகிக்கும் இந்தியா கூட்டணியின் கவனத்திற்கும் கொண்டு சென்று ஜனநாயக முறையில் சிறந்த தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இடஒதுக்கீடு, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், திருநங்கைகள் மறுவாழ்வுத் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலன், அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராகும் உரிமை, நவீன தமிழ்நாட்டில் கிடைக்கும் சமூக மற்றும் சம நீதியை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார். இந்தச் சமூகச் சீர்திருத்த வரலாற்றை மாணவர்களிடமும் கல்வியாளர்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள் பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் கலைஞர் இருக்கை (Chair) தொடங்கிடவும், அது தொடர்ந்து இயங்குவதற்கும், அதற்கான அனுமதியையும், நிதியையும் ஒதுக்கி உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக மதுரையில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கலைஞர் அவர்கள் பெயரில் உடனடியாக இருக்கை (CHAIR) துவங்குவதற்குரிய அனுமதியையும், நிதியையும் ஒதுக்கி வரலாறு படைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சிலிண்டர் விலையை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போன்று ரூபாய் 500/- க்குள் அதிக மானியத்துடன் நுகர்வோருக்கு கிடைத்திட தேர்தல் வாக்குறுதியாக இருக்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் 50 மற்றும் ரூபாய் 40 க்குள் கிடைக்கும்படி கலால் வரியைக் ஒழித்துக்கட்டி, வரியைக் குறைத்து அனைத்து மக்களும் பயன்பெரும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தனியார் மயத்தை அரசுடைமையாக்கியதைப் போன்று இன்றையப் பிரதமர் மோடி அவர்களால் அரசுத்துறை, பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி இருப்பதை மீட்டு மீண்டும் அனைத்துத் துறைகளையும் அரசுடமையாக்க முக்கியமாக இரயில்வே, விமானம், எல். ஐ. சி உள்பட நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அறிக்கை வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
GST என்கிற கொடிய அரக்கனிடமிருந்து தமிழ்நாட்டு மக்களையும், இந்திய மக்களையும் காப்பாற்றும்படியான தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்.

மேலும் அரிசி, பருப்பு, நூல், தபால்களுக்கும் உணவகங்களில் சாப்பிடும் உணவிற்கும் முழுவதும் GST வரியை நீக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்துச் சுங்கச் சாவடிகளையும் அகற்றி சுங்கம் தவிர்த்தச் சோழன் போன்று நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளோர்க்குப் பொருளாதார விடுதலை கிடைத்திட தேர்தல் அறிக்கை இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தனியார் கம்பெனி ஊழியர்களின் தனி நபர் வருமான வரம்பை ரூபாய் 10,00,000 (பத்து லட்சத்திற்கு மேல்) உயர்த்தி வரி இந்த அரக்கனிடமிருந்து காப்பாற்றும்படியான தேர்தல் அறிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் தேர்தல் அறிக்கையை வெளியிடவும் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், டியூசன் கட்டணம், நோட்டுப் புத்தகம், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட், பேனா போன்ற அனைத்திற்கும் GST, செஸ் வரி அனைத்திலிருந்தும் முழுமையான வரி விலக்கு அளிக்கும்படியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வரியிலிருந்து சமூகப் பொருளாதார விடுதலை மற்றும் சமூக நீதியை நிலைநாட்டும் தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

படித்த இளைஞர்களுக்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான வேலை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேர்தல் வாக்குறுதி தயாரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
யூ.ஜி.சி. ஐ.சி.ஹெச்.ஆர், ICSSR போன்ற நிறுவனங்களில் மதவாதத்தைப் புகுத்தியிருப்பதைத் தடை செய்ய வேண்டும். முக்கியப் பொறுப்புகளில் உள்ள அரசியல்வாதிகள் மதவாதிகளை நீக்கி உண்மையான இந்திய வரலாற்றை மீண்டும் எழுத தேர்தல் வாக்குறுதி அளிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

வருமான வரி கட்டி IT Return file செய்துள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள் போதுமான அளவிற்கு வரி செலுத்தி விட்டு மீதமுள்ள பணத்தில் தான் கடைகளில் பொருள் வாங்குகிறார்கள். டீசல், பெட்ரோல் போடுகிறார்கள், உணவகங்களில் உணவு சாப்பிடுகிறார்கள். ஆனால் இவர்களிடம் மேலும் GST சேல்ஸ் வரி, செஸ் வரி உள்ளிட்ட வரிகள் வசூலிப்பது வட்டிக்கு வட்டி பணம் வசூலிப்பது போன்ற கொடுமையாகும்.

எனவே ஐ.டி. செலுத்தியவர்களுக்கு Pan Card, Aathar Card போன்று Tax Paid Card என வழங்கி No More tax என அறிவித்து மீண்டும் மீண்டும் வரி வசூலிப்பதை தவிர்க்கும்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நிதி நெருக்கடியால் மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முக்கியமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அதிகமான நிதியை மத்திய மற்றும் மாநில அரசு ஒதுக்கி அனைத்து பல்கலைக் கழகங்களையும் உயர்கல்வி நிறுவனங்களையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தையும் அதில் படிக்கும் மாணவர்களையும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களையும் காப்பாற்றும்படியான தேர்தல் வாக்குறுதியைக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்துத் துறைகளிலும் SC, ST மற்றும் OBC பணியிடங்களுக்குரிய பின்னடைவுப்
பணி காலியிடங்களை உடனடியாக நிரப்பிட தேர்தல் வாக்குறுதி, IIT மற்றும் அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் கண்டிப்பாக இடஒதுக்கீட்டை பின்பற்றும் தேர்தல வாக்குறுதியும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் இடஒதுக்கீட்டு சமூக நீதி பின்பற்றப்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியையும் அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இரு சக்கர, நான்கு சக்கர வாகனம், பேட்டரி, Inverter பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் வாகனங்களுக்கு உரிய GST வரி அரக்கனை ரத்து செய்து குறைவான சாதாரண வரியை மட்டும் வசூலிக்கும்படியான தேர்தல் வாக்குறுதியைத் தயாரிக்கும்படியும் அதன் மூலம் பொதுமக்களையும் மாணவர்களையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் உள்ளடக்கிய அனைத்து மக்களுக்கும் நற்செய்தியை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும்படி கடமை உணர்வுடன் கேட்டுக் கொள்கிறேன் என முனைவர் நாகூர்கனி கேட்டுக்கொண்டார்.

(கல்வியாளர் முனைவர். ப.நாகூர்கனி M.A., M.Pil., Ph.D.,
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் (ஓய்வு)
தற்கால வரலாற்றுத் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
அலைபேசி எண் : 97914 81624
மின்னஞ்சல் : profnagoorkani@gmail.com)