சென்னை:கொரோனா தொற்றுக்குறித்தவிழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குறுமன்ஸ் நல உரிமை சங்கத்தின் மூலம் பொதுச்சேவையாக திருவல்லிக்கேணி மார்கெட் பகுதியில் “ஆளில்லா மலிவு விலை கீரை மற்றும் முட்டை கடை” துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்க பொதுச் செயலாளர் தனசேகரன் கூறியதாவது… கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கம் சார்பில் பலவிதமான நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ,
முக கவசங்கள், கை கழுவும் கிருமி நாசினிகள், வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியுள்ளோம்.
அந்த சேவையின் தொடர்ச்சியாக தற்போது கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நிவாரண நிதி திரட்டும் நோக்கிலும் இந்த ஆளில்லாத கீரை மற்றும் முட்டை விற்பனை கடையை தொடங்கி உள்ளோம்.

தினமும் அதிகாலையிலே இந்த கடையில் பலவிதமான கீரைகள் மற்றும் முட்டை கொண்டு வந்து வைக்கப்படும்.
கீரைக்கட்டு ஒன்றின் விலை வெறும் 5 ரூபாய் மட்டுமே.
விற்பனைக்கு என தனியாக ஆள் இருக்க மாட்டார்கள்.
ஒரு அட்டைப் பெட்டி மட்டும் வைக்கப்பட்டிருக்கும்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கீரை கட்டுகளை எடுத்துக் கொண்டு அதற்கான பணத்தை அந்த அட்டைப் பெட்டியில் போட்டு விடலாம்.
தனி மனித சமூக இடை வெளியை முறையாக கடைப் பிடித்து வரிசையாக வந்து பொது மக்கள் கீரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த ஆளில்லா கீரை கடைவிற்பனை இன்றிலிருந்து,ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தினமும் காலை 6.00 மணி முதல் செயல்படும்.

விற்பனை மூலம் கிடைக்கும் அனைத்து நிதியுடன் கூடுதலாக எங்கள் சங்க நிர்வாகிகள் அளிக்கும் நன்கொடையையும் சேர்த்து பாரத பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பிரித்து வழங்கப்படும்.
இது லாப நோக்கமில்லாத சேவையாகும் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வுக்கான முயற்சி ஆகும்.
இந்த விழிப்புணர்வு பணியில் தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்க தலைவர் பரமசிவம், துணைத்தலைவர் சாய்குமாரி, நந்தகோபால் (எ) கோபி, நாகராஜ் (எ) ராதா மற்றும் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்களித்து வருகின்றனர் என்று தனசேகரன் தெரிவித்தார்.

ஒரு கீரை கட்டுக்கு ரூ.5 வீதம் அங்குள்ள டப்பாவில் பணத்தை பொதுமக்கள் செலுத்திவிட்டு சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான கீரை கட்டுக்களை எடுத்துச்செல்கின்றனர்.
இந்த விற்பனையின் மூலம் பெறப்படும் தொகை முழுவதும் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
