பாட்டாளி மக்களின் விடிவெள்ளியும், மாபெரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் சி.கே.மாதவன்(CKM) அவர்களின் 32.ஆம் ஆண்டு செவ்வணக்க நாளில் நினைவு கூர்ந்த தோழர் கனகராஜ்!
சென்னை:
தமிழ்நாட்டு மக்களின் சுயசார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமிழ்நாட்டின் மத்திய – மாநில அரசு வேலைகள் அனைத்தும் தமிழருக்கே! தமிழ்நாட்டின் இயற்கைவளங்கள் அனைத்தும் தமிழருக்கே! என்ற முழக்கத்துடன்
மாபெரும் தொழிற்சங்க தலைவரும் முன்னோடியுமான
சி.கே.மாதவன்(CKM)
அவர்களுக்கு
புரட்சிகர
செவ்வணக்க நாளில் நினைவுகளை நினைவு கூர்ந்த தோழர் கே. கனகராஜ்
தோழர்.CKM கம்யூனிஸ இலட்சியத்தின் மீது கொண்ட நம்பிக்கையும், உறுதியும்,
மிகப்பெரியது தனது உடல்நலன், குடும்பம், பொருளாதார சிக்கல் போன்ற நெருக்கடிகளை கடந்து, இறுதி மூச்சு உள்ளவரை, இறக்கும் தருணத்திலும் பாட்டாளி வர்க்க போராளியாக தன்னை நிரூபித்தவர் அவர் விட்டு சென்ற பணியையும் – இலட்சியத்தையும் பின் தொடர்ந்து ஓய்வூதியர்கள் மற்றும் பால்வளத்துறை தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி வெற்றிக்கு அடிகோலாக விளங்கி வருபவர் கே. கனகராஜ்.
மேலும் அவர்
தியாக சுடர் சி.கெ. மாதவன்
தமிழ்நாட்டின் தொழிற்சங்க வரலாற்றில் மறக்க முடியாத மகத்தான மனிதர்தான் தொழிலாளர்களால் சி. கெ. எம். என்று அழைக்கப்படும் சி. கெ. மாதவன் அவர்கள். இந்திய விடுதலைக்குப் பின்னான காலகட்டத்தில். சிதறி கிடந்த தொழிலாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களுடைய உரிமைகளை நெஞ்சில் ஏற்றி போராட்ட களம் அமைத்த மகத்தான தலைவர் இவர்.
இவர் தொழிற்சங்க தலைவராக பணியாற்றிய காலம் தொழிற்சங்க பொற்காலம் என்றும் சொல்லலாம் , தொழிற்சங்க வரலாற்றில் அனல் வீசிய காலம் என்றும் சொல்லலாம். எத்தனை எத்தனை போராட்டங்கள். வேலை நிறுத்தங்கள். ஆர்ப்பாட்டங்கள். ஊர்வலங்கள் அப்படி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் பல்வேறு உரிமைகளையும், நலன்களையும் தொழிலாளர்கள் வர்க்கம் இன்று பெற்று அனுபவித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. அதேபோன்று ஆர். குசேலர், முன்னாள் மேயர் எஸ் . கிருஷ்ணமூர்த்தி, ஏ. எம். கோதண்டராமன் போன்றவர்களுடன் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்தார். தொழிற்சங்கப் போராட்டங்களில் ஏற்படுகிற சட்டப் பிரச்சனைகளில் உதவுவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ரங்கராஜன் குமாரமங்கலம், முன்னாள் நீதியரசர் சந்துரு, வழக்கறிஞர் சிவாஜி காந்தி போன்றோர் எப்போதும் உதவி வந்திருக்கிறார்கள்.
சிறுவனாக இருந்த காலத்திலேயே கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களை சந்தித்து அவர் மூலமாக அரசியல் பேதமின்றி தொழிற்சங்க பணியில் காலடி எடுத்து வைத்தவர் சி. கெ. எம். சந்தா வசூலிப்பாளராக தனது தொழிற்சங்கப் பணியை தொடங்கியவர். தனது அயராத உழைப்பால் பல்வேறு தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்கினார் . மாதவரம் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம், மாதவரம் பால் பண்ணை தொழிலாளர் சங்கம், டி. எஸ். ஆர் கோகுல் பவுடர், தாதாபார் மெடிக்கல் , கல்பனா லேம்ஸ், கோரமண்டல் ப்ராடக்ட்ஸ், எஸ்.ஆர்.எப், எம்.எப்.எல், ஐ. ஓ. சி, இந்தியா சிமெண்ட், இந்தியா ரேடியேட்டர், வெங்கடேஸ்வரா மில், அசோக் லேலண்ட், நகர சுத்தி தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்கினார்.
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செங்கல்பட்டு ஜில்லா போர்ட் உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோன்று, மாதவரம் பஞ்சாயத்து உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மாதவரம் பஞ்சாயத்து தலைவராக தேர்வு பெற்றார். இவர் தலைவராக இருந்தபோது தான் மாதவரத்தில் முதல் முதலாக தெருவிளக்கு அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் எரிய வைக்கப்பட்டு, காமராஜரின் பாராட்டைப் பெற்றார்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் அவர்கள் உழைக்கும் மக்கள் மாமன்றத்திற்கு வில்லிவாக்கம் தொகுதியை ஒதுக்கி, அதில் சி. கெ. எம்மை போட்டியிட வலியுறுத்தினார் . ஆனால் சி.கெ.எம் அவர்கள். தனது சொந்த தொகுதியான திருவெற்றியூர் தொகுதியில் தான் போட்டியிடுவேன். வேறு தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் அநாதை இல்லை என்று கூறி போட்டியிட மறுத்து விட்டார்.
நாளும் பொழுதும் தொழிலாளர் வர்க்கத்திற்காக உழைத்ததன் காரணமாக. கொலைப்பழி, தலைமறைவு வாழ்க்கை, சிறை தண்டனை என பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார். அவர் மட்டுமா அவர் குடும்பமே அனுபவித்தது. தொழிலாளர்களின் வாழ்க்கையில் வசந்தம் வர உழைத்த அந்த மனிதனின் வாழ்க்கையில் மட்டும் ஒரு நாளும் அந்த வசந்தம் எட்டிக் கூட பார்க்கவில்லை.
ஆனால் அனுபவித்த கொடுமைகளுக்கு அளவு உண்டா ? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது . கம்யூனிஸ்ட் தலைவர்கள் ப. ஜீவானந்தம், எம். ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் தலைமறைவு காலத்தில் தங்கி இருந்த மறைவிடங்களில் ஒன்று மாதவரம் பகுதி. அப்பொழுது ஜீவா பெண் வேடமிட்டு கே.எம். சாமி அவர்களுடைய மனைவியின் கொலுசை காலில் அணிந்து கொண்டு இந்தப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் மாலையில் லாரி நிறைய காவல்துறையினர் சி.கெ.எம். வீட்டை துப்பாக்கியுடன் சூழ்ந்து கொள்கிறார்கள். எம். ஆர். வெங்கட்ராமனை வீட்டிலிருந்து வெளியே வருமாறு காவல்துறையினர் போனில் அழைக்கின்றனர். வீட்டிலிருந்து யாரும் வெளிவரவில்லை. இதனால் ஊரில் உள்ள மக்களை எல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் அச்சுறுத்த ஆரம்பிக்கிறது. ஆனாலும் யாரும் எம்.ஆர்.வி யை காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. இதற்கு மேலும் அங்கு இருப்பது சரியல்ல, இதுநாள் வரை தன்னை பாதுகாத்த மக்களுக்கு அது பெரிய துன்பமாக மாறிவிடும் என்று எண்ணி வீட்டில் இருந்து வெளியே வருகிறார் எம். ஆர். வி.. அவருடன் சேர்த்து சி.கெ. மாதவனும் , அவருடைய தந்தை கெம்புவேலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையில் அவர்களுக்கு பெரிய சித்திரவதைகள் நடைபெறுகிறது. ஆனாலும் தங்களை நம்பி வந்த தலைவரை உரிய பாதுகாப்பு இல்லாமல் காவல்துறை கைது செய்யும்படி ஆகிவிட்டதே என்று தந்தையும் மகனும் கவலைப்படுகின்றனர்.
மற்றொரு முறை தந்தையும் மகனும் கைது செய்யப்படுகிறார்கள். இருவரின் உடைகளையும் களைந்து நிர்வாணமாக்கி, ஒருவர் கண்ணெதிரே மற்றவரை புளியம் கம்பு விளாரால் அடிப்பார்கள். ‘என்னை அடிக்கும் போது எங்க அப்பா கத்துவார் . என்னை வேண்டுமென்றால் அடிங்க. அவனை விட்டு விடுங்கள் என்று. அதுபோல் அவரை அடிக்கும் போது, நான் கத்துவேன். என்னை வேண்டுமானால் அடியுங்கள் எங்க அப்பாவை விட்டுவிடுங்கள்’ என்று. இதுபோல் ஒரு வாரம் அடித்தார்கள். ஒரு சிகிச்சை கூட இல்லை. ஒருவருக்கொருவர் வடியும் ரத்தத்தை துடைப்பது தவிர வேறு வழியில்லை. இந்நிலையில் சீழ் வேறு பிடிக்க ஆரம்பித்தது. நாங்கள் பட்ட வலிக்கும் வேதனைக்கும் அளவு உண்டோ’
“இந்நிலையில், ஒரு நாள் கோர்ட்டில் ஆஜர் படுத்த எங்களை அழைத்தனர் . எங்களுக்கு உடையில்லை. வேறு யாரோ ஒரு கைதி பயன்படுத்திய ஒரு துணியை கொடுத்தனர். அந்த துணி மூட்டையில் கையில் அகப்பட்ட துணி வெறும் ரத்தமும், சீழும் கலந்து சீலைபேன் ஓடிக் கொண்டிருந்தது. கையில் தொட்ட உடனே ஒரு அருவருப்பு . அம்மணமாக இருந்தாலும் இருக்கலாம். இதை போடக்கூடாது என்று தூக்கி எறிந்து விட்டோம் . இதைக் கண்ட காவலர்கள் எங்களை அடித்து துன்புறுத்தி போட செய்தனர். அதை அணிந்து நாங்கள் சென்றபோது உடலெல்லாம் ஒரே அரிப்பு. விசாரணை முடிந்து சிறைக்கு வந்து அந்த உடையை களைந்த போது தான் ஒரு நிம்மதி ஏற்பட்டது. அங்கு எங்களுக்கு மானம் மறைக்கும் உடைய விட அம்மணமே மகிழ்வை தந்தது. இளைய வயதில் நானும், முதிர்ந்த வயதில் எனது தந்தையும் இந்த கொடுமைகளை அனுபவித்தோம்’ என தான் அனுபவித்த சிறைக் கொடுமைகளை சி.கெ.எம் விவரித்துள்ளார்.
ஒருமுறை சி.கெ.எம்மிடம் அவரது மனைவி சொன்னாராம் ‘ குளத்துல துணி துவைக்க போனா. ஒரு முனைய துவைச்சு காய வச்சி அதை உடலில் சுத்திக்கிட்டு, மறுமுனையை துவச்சு மீண்டும் காய வைத்து புடவை கட்டுகிற மாதிரி இருக்கு. ஒரு நல்ல புடவை கூட இல்லை’ என்று. அதற்கு சி.கெ.எம் சொன்னாராம் ‘உனக்காவது ஒரு புடவை இருக்கு. அது கூட இல்லாம பல பேர் இருக்காங்க என்பதை மனதில் நினைத்துக் கொள்’ என்று.
ஜீவாவின் போதனையை ஏற்று, ஜீவா வழியில் வாழ்ந்த அந்த மனிதர் . ஜீவா போன்று குடிசையில் பிறந்து , குடிசையிலே மறைந்து போனார். அரசியல் அதிசயங்களில் அவரும் ஒருவர். அந்த அரிய எளிய மாமனிதரை இந்த நினைவு நாளில் போற்றுவோம்
(என்றும் உங்கள் வழியில்
சி. கெ.எம் சமூக நல அறக்கட்டளை-தலைவர்
அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற ஆவின் தொழிலாளர் நலச் சங்கம் -தலைவர் கே. கனகராஜ்)
