பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் உலக பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்!
சென்னை:உலக பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு (Colon Cancer Awareness Campaign) மாதமான மார்ச் 2023-இல் அது தொடர்பாக, ‘தடுக்கக்கூடியது, சிகிச்சையளிக்கக்கூடியது மற்றும் வெல்லக்கூடியது’ (Preventable, Treatable, and Beatable) என்ற தலைப்பில் மூன்று முக்கிய கவனம் செலுத்தக்கூடிய பகுதிகளில் மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை டாக்டர் காமட்சி நினைவு மருத்துவமனை மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்தியது.
மருத்துவமனை செய்திக்குறிப்பின்படி, இந்த விழிப்புணர்வுத் திட்டம் பெருங்குடல் புற்றுநோயை மையமாகக் கொண்டது. இந்த நோய் இப்போது மிகவும் பரவலாக உள்ளது. எளிய மற்றும் பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? என்று எடுத்துக் கூறப்பட்டது. 2022 ஐ.சி.எம்.ஆர். (ICMR) அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்களிடையே பெருங்குடல் புற்றுநோய் (colon cancer), மலக்குடல் புற்றுநோய்க்கான (rectal cancer) வருடாந்திர தாக்கும் விகிதம் (Annual Incidence Rates – AAR) முறையே 1,00,000க்கு 4.4 மற்றும் 4.1 ஆகும். பெண்களில் பெருங்குடல் புற்றுநோய்க்கான ஏ.ஏ.ஆர். (AAR) 1,00,000க்கு 3.9. ஆண்களிடையிலான புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் 8-ஆவது இடத்திலும், மலக்குடல் புற்றுநோய் 9-ஆவது இடத்திலும் உள்ளன. நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹெல்த் 2017 அறிக்கையின்படி, ஆண்டுக்கு 14 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகளுடன், ஆண்களில் அதிகம் கண்டறியப்பட்ட புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் மூன்றாவது இடத்திலும், பெண்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில், டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை குடல் இரைப்பை நிபுணர் டாக்டர் ஆதர்ஷ் சுரேந்திரநாத், பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை விரிவாக எடுத்துரைத்தார். குடல் இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் ரத்தினசாமி, அறுவை சிகிச்சை நடைமுறை, அதன் நன்மைகளை விளக்கினார். மேலும் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜோசப் டோமினிக், 4-ஆவது நிலை பெருங்குடல் புற்றுநோய்க்குகூட எவ்வாறு முழுமையான சிகிச்சையளிக்க முடியும்?, எனப் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளக்கினார்.
மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நோயாளிகள், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் முழு நாள் தகவல் மையம் செயல்பட்டது. பெருங்குடல் புற்றுநோய்க்கான சிறந்த மருந்துகளில் ஒன்றாக வீட்டில் தயாரிக்கப்பட்ட குடலுக்கு ஆரோக்கியமான உணவைக் காட்சிப்படுத்தும் 20 அரங்குகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சாப்பிட்டுப் பார்ப்பதற்கான மாதிரிகள், உதவிக் குறிப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 500 பேர் இதனால் பயனடைந்தனர்.
உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது ஒரு உடல்நலக் கேடு என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் மருத்துவ நிபுணர்களின் தொடர் வலியுறுத்தல் இதை முன்னிலைப்படுத்த முயன்றது. டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியும், மூத்த யோகா பயிற்சியாளருமான திருமதி. வி. ரம்யா குடல் புற்றுநோய் விழிப்புணர்வு சார்ந்து மூன்று முக்கிய அம்சங்களையும் பூர்த்தி செய்யும் விதமாக , குடல் ஆரோக்கியம் – செரிமானம் சார்ந்த பல்வேறு ஆசனங்களை பற்றி அளித்த யோகா பயிற்சி மற்றும் விளக்கம் யோகா அமர்வை சிறப்பாக்கியது.
டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி. கோவிந்தராஜன் இது குறித்து கூறுகையில், “இன்றைய வேகமான உலகில், துரித உணவு மற்றும் கொழுப்பு அதிகம் நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொள்வது, அவற்றில் உள்ள பதப்படுத்திகள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஆகியவை பெருங்குடல் புற்றுநோயின் பரவலைத் துரிதப்படுத்துகின்றன. போதுமான உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்பதும், நமது வேர்களுக்குத் திரும்புவதும் அவசியம். புகைபிடிப்பது, மது அருந்துவதைத் தவிர்ப்பது புற்றுநோய்களைத் தடுப்பதில் பெருமளவு கைகொடுக்கும்” என்றார்.
