அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்
அறிக்கை!
மதுரை :எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .இந்த விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான சைலேஷ் குமார் யாதவ்க்கு பதவி உயர்வு தற்போது வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
அதுவும் திராவிட மாடலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் குற்றவாளிகளை தண்டிக்காமல் போராடிய அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி அவர்களுக்கு தண்டனையை பெற்றுத் தருவோம் என எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சி,அதிகாரத்திற்கு வந்து விட்டு இன்றைக்கு குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவது கடும் கண்டனத்துக்குறியது.
திமுக அரசு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பதவி உயர்வு விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வேண்டுகிறேன்,எடப்பாடி ஆட்சிக் காலத்தில் நடந்த பெரும் துயரமான குற்றத்திற்கு நீதியை திமுக அரசு பெற்றுத் தர வேண்டுமென மக்களின் பெரும் எதிர்பார்ப்பை முதல்வர் அவர்கள் நிறைவேற்றித் தருவார் என உறுதியாக நம்புகிறேன்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை ஜாலியன்வாலாபாத் படுகொலை போல் படுகொலை செய்திட்ட காவல்துறையினர் மீதும்,ஏவி விட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி சட்ட நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மக்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட அன்றைய அதிகார வர்க்கத்தினர் மீதும்,அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட தமிழக முதல்வரை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
