சிவகாசி:சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து  லயன்ஸ் காஸ்மாஸ் ஹாலில்  கண்தானம் வழங்கிய 200 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனரும், கண்தான உலக சாதனையாளருமான அரிமா டாக்டர்.ஜெ.கணேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். அரிமா சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா.சுயம்புராஜன், திருநெல்வேலி. அரவிந்த் கண் மருத்துவமனை கருவிழி மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் முதன்மை மருத்துவர் டாக்டர்.அனிதா வேணுகோபால், திருநெல்வேலி, அரவிந்த் கண்மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி  சாரதா, திருநெல்வேலி அரவிந்த் கண்மருத்துவமனை கண் வங்கியின் ஒருங்கிணைப்பாளர் மருதம்மாள், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா பாலசந்தர், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்கள்   சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கண்தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு கேடயம் வழங்கி கௌரவித்தார்.  

மேலும் அவர் கூறுகையில் இறந்து போன ஒருவருடைய கண்களைத் தானம் செய்யும் குடும்பத்தினர் மனித நேயம் மிக்கவர்கள் என்றார். கண்தானத்திற்கு பதிந்து வைக்க தேவையில்லை என்றும், உறவினர்கள் சம்மதம் இருந்தாலே கண்தானம் செய்யலாம் என்றார்.

மேலும் அரிமா சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா.சுயம்புராஜன்,திருநெல்வேலி, அரவிந்த் கண்மருத்துவமனை முதன்மை மருத்துவர் டாக்டர்.அனிதா வேணுகோபால் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்துக்கொண்டு கண்தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு கண்வங்கியின் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் ஒருவரிடமிருந்து பெறப்படும் ஒரு ஜோடி கண்களை நான்கு பேருக்கு அளிக்கப்படும் இது மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள புரட்சியாகும். கண்ணாடி அணிந்தவர்கள், கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள், இரத்த அழுத்த நோயாளிகள், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகளும் கண்தானம் வழங்கலாம் என்றனர். 

கண்தான மாவட்ட தலைவரும் சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளையின் சேர்மனுமான டாக்டர். ஜெ.கணேஷ் கூறுகையில், தானத்தில் சிறந்தது கண்தானம் ஆகும். இறந்த பின்னர் ஒருவரிடமிருந்து பெறப்படும் கண்கள் நான்கு நபர்களில் வாழ்வில் ஒளி ஏற்றுகிறது. நமது மாவட்டத்தில் எங்கு ஒரு கண்தானத்திற்கு அழைப்பு வந்தவுடன் விரைவாக அந்த இடத்திற்கு சென்று அவர்களது கண்களை அகற்றி கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறேன். இறந்தவர்களின் கண்களை

எடுப்பதற்கு செய்தியை உடனே எனக்கு தகவல் தெரிவிப்பதில் அதிகமாக மாணவ, மாணவிகள் உதவி புரிந்து வருகிறார்கள். இதுவரை 4729 ஜோடி கண்களை தானமாக பெற்றுள்ளேன். தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் 1272 கண்தான விழிப்புணர்வுகளை நடத்தியுள்ளேன். அதன் பலனாக தமிழ்நாடு கண்தானம் பெறுவதில் இரண்டாவது இடமும், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது .

மேலும் அவர் கூறியதாவது: கண்தானம் செய்யும் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மனிதநேயம்மிக்கவர்களாக இருந்ததனால் தான் இந்த விழாவில் சாலை விபத்தில் இறந்த ஐந்து சிறுவர்களின் கண்களை கூட கண்தானம் பெற முடிந்தது என்றார். இந்த மனிதநேய சேவைக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தன்னார்வல தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை சங்கங்களின் அமைப்புகள் மூலம் 280 விருதுகளை பெற்றுள்ளேன் என்றார். 

இந்த விழாவில் கண்தானத்திற்கு உதவி புரிந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்கள் சிவகாசி நவீன் கண்மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர். நவீன் அவர்களுக்கு ஹெலன் கெல்லர் விருதும், ஆர்த்தி ஆம்புலன்ஸ் சர்வீஸ் உரிமையாளர் கணேசமூர்த்தி,  ஆனந்த் ஆம்புலன்ஸ் சர்வீஸ் உரிமையாளர் ஆனந்தகுமார், கங்கா ஆட்டோ உரிமையாளர் ராதா கிருஷ்ணன் அகியோருக்கு மனிதநேய சமூக சேவைக்கான பார்வையற்றோர் உயிர் காக்கும் விருதினை வழங்கி கௌரவித்தார். 

இறுதியில் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா பாலசந்தர் அவர்கள் நன்றியுரை நல்கினார்.