கட்டாய குழந்தை தொழிலாளித்துவத்தை அடியோடு அகற்ற முடிவுகள் எடுக்க வேண்டும்:தமிழ்நாடு அரசிற்கு தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் கோரிக்கை!
சென்னை:வருங்காலத்தின் நிலையை மாற்றுவோம்…
ஓடி விளையாடி, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஒன்று கூடி, கொண்டாடும் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு அழகானது. ஆனால் எல்லா குழந்தைகளுக்கு இந்த அழகிய வாழ்க்கை கிடைக்கின்றதா என்று கேட்டால் பதில் இல்லை என்று சொல்கிறது கேட்கும் செய்திகளும், பார்க்கும் காட்சிகளும்.பேனா பிடிக்க வேண்டிய பிஞ்சு விரல்கள் கம்பிகள் பிடிக்கிறது, புத்தகத்தை சுமக்க வேண்டிய தோள் பட்டை மண் சாக்கு சுமக்கிறது, கல்வி கிரீடம் அணிய வேண்டிய தலையில் செங்கல் தூசி, பல திட்டங்கள், பல விழிப்புணர்வுகள், பல அமைப்புகள் இருந்தும் குழந்தைகள் தொழிலாளர்களின் நிலை மாறாமல் நிலையாகவே இருக்கிறது.

இந்தியா,தமிழகம் பொறுத்தவரை இன்று எத்தனை குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு கணக்கே இல்லாத ஒரு அவநிலை,யாரும் இதை பற்றி கண்டுக் கொள்வதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை.
முதலாளித்துவத்தின் ஆணவம் இந்த குழந்தைகளை தனக்கு அடிமையாக மாற்றுகிறது. இந்த முதலாளித்துவ நோக்கத்தை அடியோடு அகற்ற, குழந்தை அடிமைகளின் விளங்குகளை வெட்டி எரிய , குழந்தைகளை நாளைய தலைவராக மாற்ற தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கமும், தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர்கள் அறக்கட்டளை சார்பில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குழந்தைகள் இணைந்து சென்னை பெசன்ட் நகரில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியின் முக்கிய நோக்கம் வருகின்ற ஜூன்-12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தின் அன்று இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் இந்த கட்டாய குழந்தை தொழிலாளித்துவத்தை அடியோடு அகற்ற முடிவுகள் எடுக்க வேண்டும் .
இந்த பேரணியின் மூலம் தமிழக அரசாங்கத்திடம் குழந்தைகள் வைக்கும் கோரிக்கைகள்:
குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அறிய அவசர கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
கட்டாய குழந்தை தொழிலாளர் இல்லா தமிழ்நாடு வேண்டும்.
குழந்தை தொழிலாளர்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு உடனடி தண்டனை.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான, பயமில்லா சுற்றுச்சூழல் வேண்டும். குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் இடமாற்றம் வேண்டாம்.
குடிசை மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு வேண்டும்.

இந்த பேரணி நிகழ்வில் ஏ. எஸ். குமாரி(Chairperson, Tamilnadu State Commission for Women), டாக்டர் ஏ.திவ்யநாதன் (Joint Commissioner of Labour, Chief Executive Officer/Secretary), கே.ராஜேந்திர பிரசாத் (Tamilnadu State Unorganized Manual Workers Advisory Committee Member), ஞானசேகர் தனபால் (Global Director – Children Parliament Network) , சித்ரா (Child Welfare Committee, District level Master Trainer in Women Development) ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.
