சேப்பாக்கம்:
தற்போது சென்னை நகர் பகுதியில் குறிப்பாக தியாகராய நகர் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) பழுதடைந்த காரணத்தினால் குடியிருப்புகளை இடித்து மீண்டும் கட்டி கொடுக்கப்படும் என்றும் குறுகிய காலத்தில் வீட்டை காலி செய்து தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இவர்கள் வாழும் இப்பகுதியை சுற்றி பள்ளிகள், கல்லூரிகள், வேலை செய்யும் இடம் போன்றவை அருகாமையில் அமைந்துள்ளது. தற்போது இவர்கள் வாழும் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்தால் குழந்தைகள் படிப்பு பாதிப்படையும், இவர்களின் பெற்றோர்கள் செய்யும் வேலை பாதிக்கும். குறிப்பாக இப்பகுதியில் வீட்டுவேலை தொழிலாளர்கள் மற்றும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கம் மற்றும் குழந்தை உரிமைகள் இயக்கத்தின் குழந்தைகள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் அட்டை பிராச்சாரம் வழியாகவும், கையெழுத்து இயக்கம் வழியாகவும் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
மேலும் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் குழந்தைகள் தமிழக அரசுக்கு தங்களது கோரிக்கைகளை முன் வைத்ததாவது:
பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கும்போது குழந்தைகளின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். இதனால் வளரும் குழந்தைகள் தங்கள் வாழ்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை அரசின் முன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
குடியிருப்புகளை ஆய்வு செய்து மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை மட்டும் பகுதி வாரியாக இடிக்க வேண்டும். புதிய குடியிருப்புகளை விரைவாகவும், தரமானதாகவும் கட்டி கொடுக்க வேண்டும்.
நகர்ப்புற குடிசை மக்களை இடமாற்றம் செய்வதற்கு முன் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தப் பின் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெற்றோர்கள் வாங்கும் குறைந்த வருமானத்தில் தற்போது குடியிருப்புகளை காலி செய்து புதிய வீட்டுக்கு வாடகை மற்றும் முன் தொகை செலுத்த முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.
வீட்டுவேலை செய்து வரும் இவர்களின் பெற்றோர்கள் முந்தைய அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை மறுபரிசீலனை செய்து இன்றைய விலைவாசி அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 80 என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.
குடியிருப்புகளை காலி செய்வதன் மூலம் தங்கள் பெற்றோர்களுக்கு வேலை இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும்.
ஆகவே அப்பகுதி மக்களுக்கு அருகாமையில் தற்காலிகமாக குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கத்தின்
மாநில ஒருங்கிணைப்பாளர்
சகோதரி. வளர்மதி,
குழந்தைகள் உரிமை இயக்கத்தின் உறுப்பினர்களான மகாலட்சுமி,ஜீவன்
தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கத்தை சேர்ந்த புஷ்பா ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை செய்தியாளர்களிடம் முன்வைத்தனர்…


