சேரன்மாதேவி:

சென்னை தலைமை செயலகம் செல்கின்ற செய்தியாளர்கள் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் நன்கு பரிட்சயமானவர் பாய் என்றழைக்க கூடிய திரு.முகைதீன் அகமது (வயது 69).

இவர் சிகரம் மீடியா பிரைவேட் என்கிற நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மங்கையர் சிகரம் என்கிற மாத இதழுக்கு நிருபராக இருந்து பணியாற்றி தன்னால் முடிந்த பணிகளை சிறப்பாக அர்ப்பணிப்புடன் செய்து வந்தார். அதோடு மட்டுமில்லாமல் பல பத்திரிகைகளை அமைச்சர்கள் முதற்கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை ஒவ்வொருவரின் அறைக்கும் கொண்டு சென்று சேர்த்தவர்.

பல தின மற்றும் மாத இதழ்களை சரியாக கொண்டு போய் சேர்த்ததின் மூலம் செய்தியாளர்கள் தமிழக அரசின் அடையாள அட்டைகள் பெற இவரும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க (எவராலும் மறக்கவும் முடியாது..

சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளியில் கிளம்பி காரில் ஏறினால் கூட ஒரு நிமிடம் காரை நிறுத்தி இவர் கொடுக்கும் இதழ்களை புன்முறுவலுடன் வாங்கி செல்வார்கள்… இது அவர் மீது வைத்துள்ள மரியாதை….
அந்தளவிற்கு அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பரிட்சயமானவர். அவர் விநியோகம் செய்யும் தின மற்றும் மாத இதழ்களுக்கு ஒரு சிறு தொகையையே கட்டணமாக பெற்று வந்தார். அதையும் கண்டிப்போடு கேட்கவும் மாட்டார். பல மாதங்கள் இதழ்களை விநியோகம் செய்ய சொல்லிவிட்டு அதற்கான சிறு தொகையை கூட கொடுக்காமல் பலர் அவரை ஏமாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியை சேர்ந்த திரு.முகை தீன் அஹமது அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியே பல ஆண்டுகளாக தலைமை செயலகத்தில் தன்னுடைய புத்தகம் விநியோகம் செய்யும் பணியை செய்து வந்தார்.

கொரோனா தொற்று பொது ஊரடங்கால் தன்னுடைய சொந்த ஊரான சேரன்மாதேவிக்கு சென்று குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திரு. முகைதீன் அகமதுவிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து திடிரென காலமானார். அவருக்கு 2 மகன்களும், மனைவியும் உள்ளனர். பல ஆண்டுகளாக தலைமை செயலகத்தில் புத்தகம் விநியோகம் செய்து வந்த அவர், திடீரென காலமானது செய்தியாளர்களிடமும், குடும்பத்தினரிடையேயும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 ஆண்டுகளாக மங்கையர் சிகரம் மாத இதழின் நிருபருக்கான அரசின் அடையாள அட்டைப் பெற்றவர். எனவே அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் உதவிகள் ஏதேனும் கிடைக்க செய்ய வேண்டும் என்பது சிறு பத்திரிக்கையாளர் களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக முதல்வர் அவர்கள் மறைந்த அவரின் குடும்பத்தினருக்கு கருணை உள்ளம் கொண்டு உதவ வேண்டும் என்பதே என்னை போன்ற செய்தியாளர்களின் எதிர்பார்ப்பு…

எஸ்.ஏ.ராஜ்குமார்

(செய்தியாளர்)