சென்னை :தென்காசி மாவட்டம் குறிஞ்சான் குளத்தில் உயிர்நீத்த வழிபாட்டு உரிமை தியாகிகள் நாள் நினைவு தினம் அஞ்சலி செலுத்துவதற்காக புரட்சி தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அனுமதி மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 12.3.2022 அன்று சங்கரன்கோவில் டி.எஸ்.பி. எதிர் தரப்பினரிடம் பேசியதாக ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

அதில் துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் இடுப்பில் சொருகி வைத்து இருப்போம். எவனும் வர முடியாது. விடவும்மாட்டேன், நீங்கள் தைரியமாக இருங்கள் உங்கள் தரப்புக்கும் சொல்லுங்கள், எஸ்.சி பசங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதாக ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது.

அதில் தன்னையும் அவதூறாக பேசியதாக குறிப்பிட்ட ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் இது சட்டத்திற்கும் இயற்கைக்கும் புறம்பானது. இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க டி.ஜி.பியிடம் நேரில் சென்று புகார் மனு அளித்தோம் டி.ஜி.பியும் அந்த சர்ச்சைக்குரிய ஆடியோவை தானும் கேட்டதாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் என்னிடம் உறுதி அளித்தார் இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின்போது புரட்சி தமிழகம் கட்சி தலைமை நிர்வாகி அர்சுன் பாஸ்கர் உடனிருந்தார்.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய வகையில் ஆடியோவில் பேசிய சங்கரன்கோவில் டி.எஸ்.பி. பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.