நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், சர்க்கார் உடுப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியான பட்டியலின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய எம்.ஜி.ஆர் காலனியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரக்கூடிய அவல நிலை என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. அண்மையில் குடிநீர் இணைப்புக்காக போடப்பட்ட பைப் லைன் தற்போது வரை மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பிலே போடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் காலனி அருந்ததியர் மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு அருகில் ஏற்கனவே பஞ்சாயத்து சார்பாக போடப்பட்ட குடிநீர் இணைப்பில் தற்போது போடப்பட்ட பைப் லைனை இணைப்பினை இணைக்க விடாமல் அருகில் இருப்பவர்கள் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அப்பகுதியில் பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் இருட்டிலே வாழக்கூடிய அவல நீடித்து வருகிறது. எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் கள ஆய்வினை மேற்கொண்டு பட்டியலின மக்கள் வாழக்கூடிய எம்ஜிஆர் காலனி பகுதி பொதுமக்களுக்கு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் 1994 பிரிவு 110 விதியின் கீழ் தவிர்க்க முடியாத கட்டாயக் கடமையாக கருதி காலதாமதம் இன்றி மிகத் துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிப்பதற்கு குடிநீர் வசதியையும், தெருவிளக்குகளையும் புதுப்பித்து கொடுத்திட வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மைய மாவட்டச் செயலாளர் டாக்டர் குமரவேல் அவர்கள் தலைமையில், புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் தோழர் அண்ணாமலை அவர்கள் முன்னிலையில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.