சென்னை : ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (SKI) சார்பில் தேசிய விண்வெளி தினத்தையொட்டி இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியின் பத்தாவது பதிப்பு இதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விண்வெளி வீரர்களுடன் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் செர்ஜி கோர்சகோவ், நிலவில் தரையிறங்கி சந்திரயான்- 3 விண்கலம் வெற்றியடைந்ததற்கு இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய விண்வெளி தினத்தில் இந்தியா வந்திருப்பது மிகப்பெரிய கௌவுரவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார். எதிர்காலம் இன்றைய குழந்தைகளுக்கு சொந்தமானது, வானம் எல்லையாக இருக்கவில்லை. விண்வெளி தொடர்பான சாகசங்களில் இந்தியாவின் உறுதியைப் பாராட்டிய அவர் கடின உழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவை சாதனைகளுக்கு வழி வகுக்கும் என்றார். செர்ஜி கோர்சகோவ் 194 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து நாட்கள் விண்வெளியில் தங்கிய கசாக் நாட்டு விண்வெளி வீரர் எய்டின் ஐம்பெடோவ், இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் டாக்டர் ஸ்ரீமதி கேசன் எழுதிய லெட்ஸ் கோடு ஸ்பேஸ் என்கிற தமிழ் புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அரசு பள்ளி தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டனர்.
